Followers

Thursday, October 24, 2013

A1. ஒரு மொட்டைக் கவிதை

ஒரு மொட்டைக் கவிதை 

அது 1975 ஆம் ஆண்டு..நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் MMD ல் பணியிலிருந்தேன். பேருந்து கூண்டு கட்டும் பிரிவில், மேற்பார்வையாளராக நண்பர் சங்கரன் இருந்தார். தலைமுடி பராமரிப்பில் அவ்வளவாக சிரத்தை இல்லாதவர். தொழிலாளர்களிடம்வேலை வாங்குவதில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு மதிய உணவு இடைவேலையின் போது அவருக்கு சிறிது நாட்கள் இடைவெளியில் வந்த மூன்று மொட்டைக் கடிதங்களை ( அனுப்புனர் பெயர், முகவரி இல்லாத கடிதங்கள்) என்னிடம் கொடுத்து அதுபற்றி கருத்து கேட்டார்! அதன் நகல் இன்று தற்செயலாக எனது பழய ஆவணபெட்டியை திறந்தபோது கிடைத்தது. அன்றய தொழிலாளர்களின் கவிதை திறன், குறும்பு – அது மொட்டைக் கடிதமல்ல… அது ஒரு மொட்டைக் கவிதை. நீங்களும் படிக்கலாம்.

கவிதை-1
அன்புள்ள பரட்டைத் தலையர் சங்கரனுக்கு,
“ வெட்டுக வெட்டின் முறைப்படி வெட்டுக, அன்றில்
மொட்டை யடிப்பதே நன்று “
மூன்று மாதம் முடிவெட்டா முள்ளம்பன்றித் தலையரே
முசுகுசுத்த தலையைநீர் முடிந்துகொள்ளப் போரீரோ
முடிதிருத்தும் நிலையம்தான் மூலைக்கொன்று உள்ளதே
முக்கால் ரூபாய் காசுக்கும் முடிவெட்டுவோர் உள்ளரே !

கவிதை-2
முதல் கவிதை கண்டீரோ? முடிவெட்ட முணக்கமேன்?
மூன்று காட்சி பார்க்கும் நீர் முடிவெட்ட அழுவதேன்?
காசு இல்லை என்பதா? காலம் இல்லை என்பதா?
காடுபோல வளர்த்து நீர் கவிபாட வைத்தீரே
நல்லமாட்டுக் கொருசூடு நல்லதுகேட்டு சலூன் ஓடு
பொல்லாக் கோபம் வருவதேன்? சொல்லியும் செல்ல மறுப்பதேன்?
நன்றிக் கவிதை பெற்றிட நல்ல நேரமில்லையோ?
இன்று சலூன் செல்வீரோ? இல்லை நாணமின்றி அலைவீரோ?

கவிதை-3
“ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் “
                                   ‘ நன்றிக்கவிதை ‘
நன்றிக் கவிதை பெற்றிடவே நல்லதொன்று செய்திட்டீர்
பன்றித் தலையை வெட்டிடவே பல பாக்கள் பாடவைத்திட்டீர்
நச்சரிப்பைத் தடுத்திடவே மாதமொருமுறை வெட்டிடுவீர்
எச்சரிக்கை கொடுத்திட்டோம் இதனை ஏற்று நடந்திடுவீர்.

                                 ‘ ஆறுதல் கவிதை ‘  
போனால் போகட்டும் போடா
இந்தபூமியில் முடியை வளர்த்தவர் யாரடா?
வந்தது கவிதை போனது என்ன?
சங்கர் உனக்கே தெரியாதா?
வளர்த்தவரெல்லாம் வெட்ட மறுத்தால்
மதுரையில் சலூனுக்கு இடமேது?
மண்டை என்பது மரமாகும் அதில்
மயிர்கள் என்பது விறகாகும்
போனால் போகட்டும் போடா
முடி போனால் போகட்டும் போடா.

மூன்று மொட்டைக் கவிதைகளையும் படித்து, அன்று நண்பர் சங்கரனுக்கு ஆறுதல் கூறினேன் நானும். அதன்பின் மாதத்தின் முதல் வெள்ளியில் ( அன்று கூட்டம் இருக்காது ) தவறாது சலூன் சென்று ஒட்ட வெட்டுவேன் முடியை… . .

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா   



Sunday, September 15, 2013

நினைவில் நின்றவை – 8.. குமுளி பணிமணை 1981

நினைவில் நின்றவை – 8 குமுளி பணிமணை 1981ல்

1981 ஏப்ரல், 29 அன்று காலை 9-00 மணியளவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், குமுளி கிளையின் முன்பாக என்னை இறக்கிவிட்டு, மதுரையிலிருந்து வந்த பேருந்து, குமுளி கேரளா எல்லை நிறுத்தம் சென்றுவிட்டது. அப்போது நல்ல மழை. பணிமணையின் நுழைவாயில், பெரிய இரும்பு கம்பி கதவால் பூட்டியிருந்தது. அப்போதுமுதல் அந்த பணிமணை அதிகாரியாக நான் பணியேற்க வேண்டும்.

கையில் இரண்டு பெட்டிகளுடன், மழையில் நனைந்தவாறே கதவை திறக்க குரல் கொடுத்தேன். தொலைலிருந்து அந்த காவலர் வீராச்சாமி கதவை திறக்கமுடியாது என்று கைசமிக்கை செய்து, பணிமணை அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். குமுளி பார்டர் பேருந்து நிறுத்தத்தில், மதுரை பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிய பேருந்து ஓட்டுனர், என்நிலையை பார்த்து, பேருந்தை பணிமனை முன்பு நிறுத்தி ஒலி எழுப்பினார். பேருந்தை பார்த்ததும் காவலர் வீராச்சாமி குடையுடன் வந்து இரும்புகதவை திறந்துவிட்டார். ஏன்சார் இன்னும் இங்கே நிக்கிறீங்க? பேருந்துகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி… வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது…என்று என்னிடம் காவலர் வீரச்சாமி கூறிக்கொண்டிருக்கும்போது, பேருந்து ஓட்டுனர், காவலரிடம் என்னை அறிமுகப்படுத்த, நான் எனது அடையாள அட்டையை காண்பித்தவுடன், வருத்தம் தெரிவித்து கதவை திறந்துவிட்டார்.


.குமுளி பணிமணையில் அப்போது ஒரு காவலர், ஒரு லாரி ஓட்டுனர் மூவேந்திரன் இவர்களுடன் ஒரு லாரி மட்டுமே இருந்தது. இரவில் மட்டும் கோட்டயம் செல்லும் சென்னை விரைவு பேருந்துகள் 4 வந்து செல்லும். சிறிய அலுவலக அறை-பயன்பாடற்ற குளியளறை,கழிவறை, மோட்டார் பம்ப்செட் இல்லாத கிணறு – இதுதான் பணிமணை நிலை. மதுரை தலைமை அலுவலக கேண்டீனிலிருந்து 2 டைனிங் டேபிள், 6 நாற்காலி, 1 இரும்பு பீரோ இவைகளை அன்றே வரவழைத்தேன். அலுவலக அறை, குளியளறை, கழிப்பறை சுத்தம் செய்து சின்டெக்ஸ் தொட்டியில் கிணற்று தண்ணீரை வாலிமூலம் கவலர், ஓட்டுனர் மூலம் தினமும் காலையில் நிரப்ப செய்தேன்.

முதல்நாள் மாலை 6-00 மணியளவில் சுமார் 200 ஆடு மாடுகள் பணிமனக்குள் நுழைந்தன. பணிமணை வளாகத்தில் நுழைவாயில் முன்பு சிறிய குடிசை போட்டு பலவருடங்களாக காவலர் வீராச்சாமி ஒரு பெண்னுடன் சேர்ந்து வசிப்பதும், இரவில் பணிமணையில் தங்கும் ஆடு மாடுகளுக்கு தினமும் வாடகை பணம் மாமூல் வசூல் செய்வது காவலர் வழக்கம் என்பதையும், குமுளி கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர் செல்லையா அவர்கள் மூலம், முன்பே அறிமுகமாகி தெரிந்து கொண்ட்தால், காவலரை எச்சரித்து, குடிசையை காலிசெய்யவைத்து, ஆடு மாடுகளை வெளியேற்றி, பணிமணை வெளியே சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை இனி இங்கு சாராயம் விற்கக் கூடாது என்று குமுளி காவல்துறையினர் மூலம் எச்சரித்து, அனுப்பினேன்.

சிலருக்கு சிலரை காரணமின்றி பிடிக்காது. சிலருக்கு சிலரை காரணமின்றி பிடித்துவிடும். அதுபோலத்தான் அன்றய பொதுமேலாளர் திரு.ரங்கநாதன் அவர்களுக்கு என்னிடம் ஒரு அபிமானம் இருந்தது. மதுரையிலிருந்து குமுளிக்கு புறப்படும்போது அவர், குமுளியில் நான் செய்யவேண்டிய முக்கிய பணிகளாக கீழ்கண்டவைகளை கூறினார்:

1.   பணிமணை தளப்பகுதி மண்மேட்டை தகர்த்து, அப்புறப்படுத்தி லோயர்கேம்ப் பகுதியில் லாரிமூலம் சேர்க்கவேண்டும். பணிமணை தளம் சமபடுத்த வேண்டும் (Earth work).

2.   லோயெர்கேம்ப் மின்வாரியத்திலிருந்து, குமுளி பணிமணைக்கு, திரீபேஸ் கனக்சன் வாங்கவேண்டும்.

3.   பணிமணை கிணற்றில் மோட்டார் பொறுத்தி மேல்நிலை நீர்தொட்டியில் நீரேற்றவேண்டும்.

தலைமை அலுவலக பொறியியல் துறைமூலம் வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பணிமணை தளம் சமபடுத்தும் வேலை – மண்குவியளை லாரியில் ஏற்ற, லாரி ஓட்டுனர் மூவேந்திரன் லாரிமூலம் அவைகளை லோயெர்கேம்ப் பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணி ஆரம்பமானது. சில பல தினங்கள் கடந்தன.

பணிமனை அருகிலுள்ள எஸ்டேட் நாய் வைசர் என்னுடைய கவனிப்பால் என்னுடன் பழகி, என்னுடனேயே தங்கிவிட்டது. பணிமனைக்கு சம்பளமின்றி உண்மையான ஒரு காவலனாக வைசர் இருந்தது. ஒருநாள் லாரி ஓட்டுனர் மூவேந்திரன் கடுமையான. குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை எனது அலுவலக அறையில் இருமேசைகளை இணைத்து அதன்மேல் கம்பளி விரித்து அதன்மேல் படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, இரவு 7-007777ஏழு மணியளவில் கைலி, பனியன். முண்டாசுடன் நான் லாரியை பணிமனைக்குள் இயக்கிகொண்டிருந்தேன். அப்போது பணிமணை வாசலில் ஒரு அம்பாசடர் கார் வந்து நின்றது. வைசர் குறைத்துகொண்டே காருக்கு வழிவிட மறுத்தது.

வைசருக்கு குரல் கொடுத்து கார் பணிமணை வந்து, அதிலிருந்து இறங்கிய பொதுமேலாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் அலுவலக அறைக்கு சென்றார். அங்கு லாரி ஓட்டுனர் தூங்கிகொண்டிருந்தார். அவரை எழுப்பி மேளாளர் எங்கே? லாரியை கைலி, பனியன், முண்டாசுடன் ஓட்டுவது யார்? என்று வினவினார். தனக்கு காய்ச்சலாயிருப்பதால், மேலாளர், அவரது அறையில் ஓய்வு எடுக்கசொல்லிவிட்டு அவர்தான் லாரியை இயக்கிகொண்டிருக்கிறார் என்ரு கூறும்போதே, நானும் பொதுமேலாளரிடம் வந்து, வணக்கம்கூறி, லாரியில் மண்அள்ளும் வேலை தொய்வு ஏற்படாமல் இருக்க மாற்று ஓட்டுனராக பணிசெய்யவேண்டிய நிலையை எடுத்துகூறினேன்.

என்மேல் அவருக்கு நல்லபுரிதல் ஏற்பட்டு, எனது குடும்பம் பற்றி விசாரித்தார். என் அம்மா கோயம்புத்தூரில் என் தம்பியுடன் இருக்கிறார்கள். என் ஒருவயது மகன் அருண் சென்னையில் என்மாமியார் வீட்டில் இருக்கிறான். என் மனைவி மதுரையில், அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் உதவிபேராசிரியையாக பணியாற்றுவதால், மதுரை கே.கே.நகரில் தனியாக வசித்து வருகிறார். நானோ தங்கள் உத்திரவுக்கு கட்டுப்பட்டு தனியாக குமுளியில் உள்ளேன். எனதுமேசைமேல் எனது 1 வயது மகன் அருண் புகைபடம், அருகில் வைசர் ஜெர்மன்செப்பெர்ட் நாய் இதுதான் தற்போது என் உலகம். தனிமையை வெல்ல பணிமணை வேலையில் அதிகமாக ஈடுபடுவதாக கூறினேன்.

பணிமணையை சுற்றி பார்த்த அவர், பணிமணை தளவேலை முடியும்நிலை பார்த்து எனை பாரட்டினார். திரீபேஸ் மின் இணைப்பு, மோட்டார் பம்ப்செட் வேலையை விரைவில் முடித்துவிட்டால், மதுரைக்கு மாற்றலாகிவர ஆவன  செய்வதாக கூறி சென்றுவிட்டார்.


தினமும் காலை 5-00 மணிமுதல் 6-00 மணிமுடிய குமுளி பணிமணையிலிருந்து லேக்வியூவ் ஹோட்டல் வரை நடைபயிற்ச்சி. காலை 6-00 மணிக்கு பணிமணை எதிரில் உள்ள தோழர் செல்லையா ஏலக்காய் எஸ்டேட்டில் குளியல். தோழர் செல்லைய்யாவுடன் அரட்டை. காலை 7.30 மணிக்கு குமுளி செக்போஸ்ட் அருகிலுள்ள விடுதியில் 2 சப்பாத்தி+ முட்டைகறி, 8-00 முதல் 12-00 மணி முடிய பணிமணை வேலை. மதியம் 12.30 மணிக்கு லோயர்கேம்ப் மெஸ்சிலிருந்து பேருந்துமூலம் வரும் தயிர்சாதம், மதியம் 1-00 மணிமுதல் 5.00 மணிமுடிய பணிமனை வேலை. மாலை 5-00 மணிக்கு தோழர் செல்லையாவுடன் குமுளி பணிமணையிலிருந்து புறப்பட்டு, தேக்கடிசெக்போஸ்ட் வரை பேசிக்கொண்டே நடைபயிற்சி. குமுளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயளாலர் தோழர் சாக்கோ மற்றும் குமுளி ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் தோழர் மோகன் ஆகியோரிடம் கேரள அரசியல் பற்றி உரையாடல், முடித்துக்கொண்டு, இரவு 8-00 மணிக்கு மோகன் வாட்ச் கம்பனி அருகிலுள்ள உணவுவிடுதியில் 2 ஆப்பம், 1 வரடீ, இரவு 8-30 முதல் 9-30 முடிய ஜெர்மன்செப்பர்ட் வைசர், காவலர் வீராச்சாமி, ஓட்டுனர் மூவேந்திரன் இவர்களுடன் பொழுதை கழித்துவிட்டு, இரவு 10-00 மணிவரை டிரான்சிஸ்டரில் வானொலி பாடல்களை கேட்டுக்கொண்டே தூக்கம். இதுதான் எனது தினசரி குமுளி வாழ்க்கை.

1979 ஜூன் 14 அன்று சென்னையில் எனக்கு திருமணம். 1981 ஜூன் 14 அன்று எனது குமுளி அலுவலகத்தில் மாலை 5-10 மணியளவில் எனது மேசைமீதிருந்த எனது 1 வயது மகனின் புகைபடத்தை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது என்பின்புறம் வந்து இதனைகவனித்த தோழர் செல்லையா தயங்கியபடியே என்னிடம் கூறியது… எவ்வளவு நாள் தனியாக இருந்து கஸ்டபடுவீங்க? குமுளியிலேயே படித்த நல்ல பெண் இருக்கிறது. திருமணம் செய்து குடும்பமாக இருப்பதுதான் நல்லது… (மணைவி இல்லாமல் தனியாக 1 வயது குழந்தையுடன் நான் இருப்பதாக அனுமானித்துள்ளார்)—உடனடியாக மதுரையிலுள்ள என் மணைவியை 1 வார விடுப்பில் குமுளி வர ஏற்பாடு செய்தேன். அந்த ஒருவாரம் முழுவதும் இரவு 9.00 மணிமுதல் 10-00 மணி முடிய மற்றும் காலை 6-00 மணிமுதல் 7-00 மணி முடிய என்மணைவியுடன் குமுளி – தேக்கடி சாலையில் மலைபூக்களின் வாசனையை நுகர்ந்துகொண்டே நடப்போம். குமுளி மக்கள் எங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளித்ததை இன்றும் பெருமையாக நினைக்கிறேன்.

1981 ஜூலை முதல்வாரத்தில் ஒருநாள். லோயர்கேம்ப் மின்வாரிய அலுவலகம் சென்று கோட்ட பொறியாளரை சந்தித்தேன். குமுளி பணிமனைக்கு திரீபேஸ் மின் இணைப்புக்கு விண்னப்பித்து பலமாதங்களாகியும் இணைப்பு கிடைகாததை கூறி, விரைவில் இணைப்பு வழங்கிட உத்திரவிடுமாறு கேட்டுக்கொண்டேன். பிறகு என் வழக்கமான பாணியில் சார் உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறது.. உங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? என்ன வேலை செய்கிறார்கள்? சாருக்கு சொந்த ஊர் எது? சார் கண்டிப்பான ஆபீசர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.. என்று நலம்விசாரித்தேன்…


அவரிடமிருந்து எனக்கு தேவையான ஒரு முக்கியமான தகவல் கிடைத்தது! அவரது மகள் மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி, புவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறார் என்பதுதான் அது. அவர் தொலைபேசி எண்னை குறித்துகொண்டு, உடன் மதுரைக்கு சென்று கல்லூரியில் புவியியல் பேராசிரியையான, எனது மணைவியை சந்தித்து, அவரது உதவியை கேட்டேன். லோயர்கேம்ப் மின்வாரிய கோட்டமேலாளர் மகள் யாரும்மா இங்கு படிப்பது? என்று அவரது மாணவிகளிடம் விசாரித்போது, மேம்.. நான்தான் மேம் அது என்று ஏற்கனவே அறிமுகமான ஒரு மாணவி வந்தார்.

உங்க மேம் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வது உன் அப்பாவின் கையில்தான் உள்ளது. குமுளி பணிமணைக்கு விரைவில் திரீபேஸ் மின் இணைப்பை அவர் வழங்கியபிறகுதான், எனக்கு குமுளி – மதுரை பணிமாற்றம் கிடைக்கும்…எனவே அப்பாவிடம் சிபாரிசு செய்யகோரினேன். பிறகென்ன ஒரு சில தினங்களில் மின் இணைப்பு கிடைத்தது. உடன் தலைமை அலுவலக பொறியியல் துறைமூலம் மோட்டார் பம்ப்செட் அமைத்து, மேல்நிலை நீர்தொட்டியில் கிணற்று நீரை ஏற்றியது. தகவலை மதுரை பொது மேலாளரிடம் உடன் தெரிவித்தேன்.

ஒரு சில தினக்ங்ககளுக்கு பிறகு, மதுரை தலைமை அலுவலகத்திலிருந்து உயர்மட்ட அதிகாரி திரு ரமேஷ் அவர்கள் ( அவர்தான் கனரகவாகனம் ஓட்டுதலுக்கான உரிமம் வைத்துள்ள நிறுவனத்தின் முதல் பி,இ பட்டதாரி, மற்றும். எனது துரோனாச்சாரியார் ) என்னிடம் கனரக வாகனம் ஓட்டுதலுக்கான உரிமம் உள்ளத? என்று விசாரித்தார். நிறுவனத்தின் பி.இ + கனரகவாகன ஓட்டுதலுக்கான உரிமம் வைத்துள்ள இரண்டாவது நபர் என்ற எனது தகுதியை அவரிடம் தெரிவித்தேன்.

1981 ஜூலை 20 அன்று குமுளி கிளையிலிருந்து, மதுரை தலைமை அலுவலகத்திலுள்ள ஓட்டுனர் பயிற்சி மையத்திற்கு, முதல்வராக பணிமாற்றம் வந்தது. அன்றே பணி ஒப்புக்கொண்டேன்.  ,


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா



Sunday, August 25, 2013

நினைவில் நின்றவை - 7..மாற்று திறனாளி.

நினைவில் நின்றவை-7

1970 ஆகஸ்ட் மாதம்  17 ம் நாள் எனது மாற்று திறனாளி நண்பர் ராஜு எனக்கு பிரைல் எழுத்து பதிவு தகட்டினை வழங்கி, ஒரு அட்டையை அதில் இணைத்து மூடி. அதில் உள்ள 6 தொளைகளில் ஒரு குத்தூசியால் அழுத்தி, ஆங்கில எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுத்தார். அட்டையின் ஒருபக்கம் குத்தியதும் அந்த இடம் பின்புறத்தில் புடைத்து, தடவிபார்க்கும்போது ஒரு புள்ளியை உணர முடிகிறது.

அந்த அட்டையை இன்று எனது பழய பெட்டியிலிருந்து கண்டுபிடித்தேன்….நிணைவுகள் மலர்கிறது..

1970 ல் மதுரை தொழிற்பேட்டையில் ELECTRIC CONTROL EQUIPMENT COMPANY ல் பயிற்ச்சியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். அன்றய நீதிக்கட்சியின் மதுரை பிரமுகர், மரியாதைக்குறிய அய்யா PTR அவர்களின் குமாரர் திரு. கமலதியாகரஜன் அவர்கள் கம்பனியின் உரிமையாளர் மற்றும் இயக்குனர். அலன் நித்தியானந்த லியோனார்ட் எனும் பொறியாளரின் கீழ் நானும், நண்பர் ராஜுவும் அப்போது அங்கு தொழிற்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம்.

லேத்மெசின், சிலாப்பிங்மெசின், மில்லிங்க்மெசின், டிரிலிங்மெசின் கொண்ட மெசின்சாப்பில் எனது நண்பர் ராஜு, பார்வைபடைத்த என்னைவிட சிறப்பாக பணியாற்றுவார். என்னோடு கடித தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினார்.

ஒரு பிரைல்மெசினை வழங்கி அதில் அட்டையை இணைத்து, குதூசிமூலம் ஆங்கில எழுத்துக்களை பதிவு செய்ய கற்றுகொடுத்தார். அட்டையில் தகவல்களை புள்ளிகளாக இணைத்து மேடிட்டு, கடிதம் படைத்து, அதனை ஒரு கவரில் வைத்து பசைதடவி ஒட்டி, கவரின் தலைப்பில் LETTER FOR THE BLIND என்று எழுதி, அதன்கீழ் அவரது முகவரியை பேனாவில் எழுதி, தபால் பெட்டியில் போட்டுவிட்டால் போதும். கவர் எவ்வளவு பெரிய அளவில் இருந்தாலும், தபால்தலை (stamp) ஒட்டதேவையில்லை.

நமது இந்திய அரசு மாற்று திறனாளிகளுக்கு தகவல் தொடர்பில் இத்தகய சலுகையை வழங்கியிருப்பது அன்றுதான் எனக்கு தெரியவந்தது. அப்போது எனக்கு வயது 22.

சில பல வருடங்களுக்கு பிறகு,.. 1986 ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை நகர்கிளையில், போக்குவரத்து பொறியாளராக பணியிலிருந்த போது, எனது அலுவலகத்திற்கு தனது மணைவி மற்றும் 6 வயது மகனுடன் வந்திருந்தார் நண்பர் ராஜு. மாற்று திறனாளிகளுக்கான நகர்பேருந்து இலவச அனுமதியட்டை தனக்கும், தன்மணைவிக்கும் வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் எனது அலுவகத்திற்கு வருவதாக தெரிவித்தார்.

அலுவலக நண்பர்களுக்கு அவரை அறிமுகம் செய்து, அவருக்கு வேண்டிய உதவிகளை தாமதமின்றி செய்து கொடுக்கும்படி கூறிவிட்டு, நண்பரிடம் நலம் விசாரித்தேன்.

பிறக்கும்போதே தன்னைபோல் தன்மணைவியும் பார்வைதிறனற்றவர் என்றும், காதல் திருமணம் என்றும், பார்வையுள்ள 666666ஆறு வயது மகன் தங்களை வழிநடத்துவதாகவும், வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்றும் கூறினார். என்னைபற்றியும் அவரிடம் கூறி, மலரும் நிணைவுகளை பகிர்ந்துகொண்டோம்.

உங்களுக்கும் பிரைல் மொழி பற்றிய புகைபடம் இங்கு இணைத்துள்ளேன்.

சாலையை கடக்க முயலும் மாற்று திறனாளிகளுக்கு அவ்வப்போது சாலையை கடந்துசெல்ல உதவுங்கள். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வந்ததும், அவர்களுக்கு தகவல்கொடுத்து, பேருந்தில் பயணம் செய்ய உதவுங்கள்.



  
All the letters of English in ‘BRAIL’ is closed with in the six places as in Fig.
For Ex: A=1   B=1,2   C=1,4   D=1,4,5   E=1,5   Q=1,2,3,4,5
This is for your understanding capacity only. It is not use without the help of BRAIL MACHINE.  

மீண்டும் சந்திப்போம் -சரவணபவா

Monday, August 05, 2013

நினைவில் நின்றவை – 6..சட்டம் ஒரு இருட்டறை

நினைவில் நின்றவை – 6

1992 ல் நடந்தது இது அப்போது நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக,திருப்புவனம் கிளை மேலாலராக பணியிலிருந்த போது ஒருநாள் மதியம் ஓட்டுனர் நடத்துனர் பணிமாற்றம் செய்யும் வேலையில் .பணியாளர் ஓய்வறையில் பாம்பு ஒன்று நுழைந்து விட்டதாக புகார். ஓய்வறையில் பழைய ரிக்கார்டு நோட்டுக்கள் கொண்ட சாக்குமூடைகள் பல குவிந்திருந்தன. பல ஆண்டுகளாக பல மேலாலர்கள் முயற்சி செய்தும் அவைகளை அப்புறப் படுத்த தலைமை அலுவலக ஒப்புதல் கிடைக்காததால், நாளாக நாளாக பலசாக்கு மூடைகள் பணியாளர் ஓய்வறையை ஆக்கிறமித்து, பாம்பும் நுழைந்து விட்டது. நான் பலமுறை முயற்சித்தும் ஏதாவது காரணம் காட்டி பழயஆவணங்களை அப்புறபடுத்த தலைமை அலுவலக ஆவணகாப்பு அதிகாரிகள் தடைசெய்து வந்தனர்
.
1992 நவம்பர் 5அன்று காலை 2 மணியளவில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுறண்டு ஓடியதில், திருப்புவனம் பணிமனைக்குள்ளும் நுழைந்தது தகவல் கிடைத்ததும் பணிமனை சென்று தொழிலாலர்கள் பதட்டத்தை தணித்து, உடனடியாக செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கையில் அவர்களை ஈடுபடுத்தினேன்.
முதற்ககட்டமாக டீசல் பங்க்குழாய்களின் மூடிகளை தண்ணீர் புகாதவாறு பாலிதின்பைகளை கொண்டு  கவர்செய்து மூடியால் மூடினோம்.

காசாளர் அறையிலிருந்த பணப்பெட்டி, நடப்பு 3 ஆண்டு ஆவணங்கள் இவைகளை மட்டும் மேசைகளின்மேல் அடுக்கிவைத்தோம். சிறிது சிறிதாக வைகை ஆற்று வெள்ளம் அலுவலகம், பணியாளர் ஓய்வரை, பராமரிப்புதளம் ஆகியவற்றை ஆக்கிறமித்து தண்ணீர் மட்டம் 2 அடி உயர்ந்து சுவர்களில் தடம் பதித்து நின்றது.

நீண்ட வருடங்களாக எங்களை இம்சித்து வந்த அந்த பழைய ஆவண மூட்டைகள் தண்ணீரில் மிதப்பதை பார்த்தோம். எந்தபணியாளரும் அந்த பழைய சாக்குமூடைகளை பற்றி கவலைப் படாமல் மற்ற ஆகவேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துமாறு கட்டளையிடப்பட்டது

மறுநாள் தலைமை அலுவலகத்திலிருந்து அந்த பழய சாக்குமூடைகளை மட்டும் ஏன் கவனிக்கவில்லை? என்று கேட்டபோது அதனை கவனிப்பதற்குள் வைகை ஆற்று வெள்ளம் அதிகமாக உயர்ந்துவிட்டது, என்று ஒரே வார்த்தையில் பதில் கூறப்பட்டது..

சில நாட்களுக்கு பின்பு கிளைக்கு வந்த நிர்வாக இயக்குனர் என்னிடம்,, முக்கியமான ஆவணங்கள் மற்றும் பணப்பெட்டி இவைகளை மீட்கமுடியும்போது, அந்த பலவருட பழய தேவையற்ற ஆவண சாக்குமூடைகள் மட்டும் மிதந்தது எப்படி?  என்று கேட்டுகொண்டே வரும்போது, பணிமணையில் நிறுத்தப்பட்டிருந்த நிர்வாக இயக்குனர் எனது மரியாதைக்குறிய பால்ராஜ் அவர்களின் காரில் படிந்திருந்த வெள்ளநீர் கசடுகளை துடைத்துகொண்டிருந்த இருதொழிலாளர்கள்  நீங்கள் யோசித்துகொண்டே இருந்தீர்கள். இயற்கை நல்லமுடிவெடுத்துவிட்டது. என்று அவருக்கு பதில் கூற சிரித்துகொண்டே திரும்பிவிட்டார். அன்று மதியமே மேலும் ஒரு சோதனை.

திருப்புவனம் கிளை பணியாளர்களுக்கு சலுகை விலையில் கொடுக்கப்படும் மதிய உணவு தினமும் மதுரை தலைமை அலுவலக கேன்டீனில் தயாரிக்கப்பட்டு, லாரிமூலம் மதியம் 12 மணியளவில் திருப்புவணம் கிளைக்கு வரும் அன்று KPS மணி என்ற ஓட்டுனர் லாரியில் பாத்திரங்களில் தனித்தனியாக சாதம், சாம்பார், ரசம், மோர், காய்கறி வைத்து வழக்கம்போல் கொண்டுவரும் வழியில், ஒருமேட்டில் ஏறி இறங்கும்போது, சாதத்தை தவிற மற்றதெல்லாம் கீழே கொட்டிவிட்ட்து. மதியம் 12 மணிக்கு தொழிலாளர்கள் கேன்டீன் உணவிற்காக காத்துகொண்டிருக்கும் போது, வெறும் சாதத்துடன் மதுரை லாரி வந்து நின்றது. லாரி ஓட்டுனர் KPS.மணி கீழே இறங்கியவுடன் பசியுடன் இருந்த தொழிலாளர்கள் முன்னிலையில் கதறியழுது, என்வேலையை காப்பாத்துங்க சார். தலைமை அலுவலகத்திற்கு தெரிந்தால், என்வேலையே போய்விடும். இங்கு மதிய உணவு இல்லாவிட்டால் தொழிலாளர் பிரச்சனை ஏற்படும். சாவதை தவிர எனக்கு வழியே இல்லை என்று புலம்பியவரை தேற்றினேன்.

திருப்புவணம் கிளை அருகிலுள்ள மளிகை கடையில் புளியோதரைபொடி, நல்லெண்ணை, உப்புபொடி, உருளைகிழங்குசிப்ஸ் அகியவற்றை எனது கைப்பணத்தில் வாங்கிவந்து, திடீர் புளியோதரை தயாரித்து, அன்றுமட்டும் அளவுசாப்பாடு கொடுத்தோம். தொழிலாளர்களிடம் நல்லுறவு வைத்திருந்ததால், என்னால் அன்று KPS மணியை காப்பாற்ற முடிந்தது

சிலபல நாட்களுக்கு பின்பு, அதே திருப்புவனம் கிளையில் ஒரு பொதுவேலை நிறுத்த நாளில், மதுரை கேன்டீனில் இருந்து வந்த உணவு அனைத்தும், பணியாளர்கள் இல்லாததால் வீணாகும் நிலை ஏற்பட்டது. பணிமணை காவளரை அழைத்து சாதத்தில் தண்னீர் ஊற்றி மூடிவைக்கும்படி கூறினேன்.

அன்று இரவு சுமார் 7.00 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து எனது நண்பர் காவல்துறை அதிகாரி தொலைபேசியில் அழைத்தார். திருப்புவனம் ஊரில் முழு கடையடைப்பு என்றும் சுமார் 120 போலீஸ் காவளர்கள், பாதுகாப்பு பணிக்கு வந்தவர்கள் மதியம் முதல் சாப்பிடாமல் பணிபுறிவதாக கூறினார்

நானும், தலைமை போர்மன் சண்முகம் மற்றும் பணிமனைக் காவளர் இருவர் மட்டுமே பணிமனையில் இருப்பதாகவும், பொலீஸ் காவளர்களை உடனடியாக பணிமனைக்கு அழைத்து வந்தால், அவர்களுக்கு தண்னீரூற்ற பட்ட பழயசாதம், தயிர், ஊறுகாய் கிடைக்க ஆவனசெய்வதாகவும் கூறினேன். அவர்களும் வந்து, பழயமுது சாப்பிட்டு பணியை தொடர்ந்தனர். இந்நிகழ்வு ஏற்கனவே இருந்த போக்குவரத்துதுறை – காவல்துறை உறவை மேலும் பலப்படுத்தியது.

மீண்டும் சந்திப்போம் -சரவணபவா


Sunday, August 04, 2013

நினைவில் நின்றவை – 5..ஜெயமதி விநாயகர் ..

நினைவில் நின்றவை – 5

2000 ல் நடந்தது இது. மதுரை – திருமங்கலம் நெடுஞ்சாலையில் திருநகர் 3வது நிறுத்தம், சீத்தாலக்ஷ்மி மில் நிறுத்தம் கடந்தபின் வருவது முல்லைநகர் பேருந்து நிறுத்தம். 1990 ல் இங்கு அரசு போக்குவரத்து அலுவலர்கள் 11 வீடுகளை கட்டி குடியேறியபின்பு, சிலவருடங்களில் மேலும் 25 குடியிருப்புக்கள் தோன்றின. ஒவ்வொரு மாதமும் 2 வது சனிக்கிழமை ஒவ்வொரு வீட்டிலும் குடியிருப்போர் கூட்டம் நடைபெரும். அத்தகய ஒரு கூட்டத்தில், முல்லைநகரில் ஒரு வினாயகர் கோவில் அமைக்கவேண்டும் என்று பேசப்பட்டது..

அப்போது நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், பறக்கும்படை அலுவலராக பணியாற்றிய போது சத்தியமங்கலம் பகுதியில் வாகனசோதனை பணியிலிருந்தபோது, அந்த இடத்தில் வினாயகர் சிலைகளை சிற்பி ஒருவர் செதுக்கி கொண்டிருந்தார். அவரிடம் என்கைப்பணத்தை கொடுத்து ஒரு வினாயகர் சிலையை வாங்கி எனது ஜீப்பில் வைத்து, பணிமுடித்து வீட்டிற்கு அதிகாலை 4.00 மணிக்கு நுழையும்போது, தேசிய நெடுஞ்சாலை-7 மற்றும் முல்லைநகர் சந்த்திப்பில் ஒருஓரமாக வினாயகர் சிலையை இறக்கிவைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து படுத்துவிட்டேன்.

அன்று காலை 10.00 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால் வினாயகர் சிலை முன்பாக சிறுகூட்டம். திடீர்வினாயகர், சுயம்புவினாயகர் – கண்திறக்காதநிலையில் உள்ளது. மதுரை பசுமலை சிற்பகூடத்திலிருந்து ஒரு சிற்பியை அழைத்து கண்னை திறக்கசெய்து, ஒரு அய்யரை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும், பின்னால் கொவில் கட்டிக் கொள்ளலாம் என்று கூட்டத்தில் பேசிகொண்டிருந்தனர். உடனடியாக நான் தலையிட்டு பசுமலையிலிருந்து ஒரு சிற்பியை அழைத்து, வினாயகர் சிலை கண் திறக்கசெய்து, எங்களது சக அலுவலர் ராமசந்திரன் மகன் சந்தீப் ( வயது 17ஐய், உடுப்பி ஐய்யர், மாணவன் ) மூலம் அன்று மாலையே பூஜையை தொடங்கினோம். கணிசமான தட்சனை சந்தீப்பிற்கு கிடைத்தது  தற்போது சந்தீப் அமெரிக்காவில் திருமணமாகி, வேலை பார்த்துவருகிறார்.

சிலநாட்கள் சென்றன. பிள்ளையாருக்கு ஒரு பேர் வைக்கனும்னு பேசிகிட்டாங்க. மறு நாள் ஜெயமதி வினாயகர் என்ற கல்வெட்டு பிள்ளையார் சிலை முன்பு இருந்தது..எனது நண்பர் ராஜன் (சுப்ரீம்ஹோட்டல்) ஜெயமதி பேர் நன்றாகவே உள்ளது என்றார். மற்றொரு நண்பர் RS.மணி விசனப்பட்டார். கடவுள் பேரைத்தான் மனுசனுக்கு வைப்பாங்க, இங்கு மனிதன் பேரை கடவுளுக்கு வைகிறாங்க. அதுவும் இங்கு முதலில் குடியிருப்புகளை கட்டிய ஜெயராஜ் மற்றும் மதிவாணன் இருவரின் பெயெரிலிருந்துதான் ஜெயமதி வினாயகர் பெயர் உருவாகியுள்ளது. இது கூடாது என்றார் மணி. ஜெயலலிதா அம்மா மற்றும் பானுமதி இருவரின் பெயரிலிருந்தும்கூட ஜெயமதி உருவாகியிருக்கலாம் என்று மறுப்பு தெரிவித்தார் எனது நண்பர் ராஜன். அப்போது நான் சென்னையில் இருந்தேன்.

சிலபல நாட்களுக்குப் பிறகு நான் மதுரை திரும்பியபோது ஜெயமதிவினாயகர் என்ற கல்வெட்டு மட்டுமே முல்லைநகரில் இருந்தது. வினாயகரை ஒருநாள் அதிகாலையில் ஆட்டொவில் வந்த சிலர் திருடிச்சென்று, அருகிலுள்ள கப்பலூர் தொழிற்பேட்டை அருகில் கோவில் அமைத்துவிட்டனர்.. என்னை பார்த்த நண்பர் ராஜன் ஜெயமதிவிநாயகர் பெயருக்காக தான் ஒருவன் மட்டுமே கூட்டத்தில் வாதாடியதாகவும், மற்றவர்களெல்லாம் துரொகிகள் என்றும், மறுநாளே அந்த ஜெயமதிவினாயகரும் காணாமல் போய்விட்டார் என்றும் கூறி கதறியவரிடம் தேற்றினேன் நான் கீழ்கண்டபடி:

மனிதசாதியின் குழந்தைப் பருவத்தினுடைய பயம் நிறைந்த இதயத்தால் தோற்றுவிக்கபட்ட ஒரு உருவத்தின் மலர்ச்சியே கடவுள்! மனிதர்கள் கட்டுமிராண்டி நிலையிலிருந்த காலத்தில், அதாவது அவர்களுடைய அறிவு வளர்ச்சி தற்கால ஐந்து வயதுக் குழந்தையினுடையதைப் போன்றிருந்த காலத்தில், அவர்கள் இருட்டு, தெரியாத இடம், அறிமுகமில்லாத பொருள் இவைகளைக் கண்டு பயந்தார்கள். மின்னல், நெருப்பு போன்ற சக்திவாய்ந்த பொருள்கள் அவர்களின் மிகுந்த பயத்திற்கு காரணமாக இருந்தன. அதிலிருந்து அவர்கள் தேவதைகளை கற்பனை செய்யத் துவங்கினார்கள். மெது மெதுவாக இறந்துபோன வீர்ர்களும், பலசாலிகளும் இந்த தேவகூட்டத்தில் இடம்பெற்றார்கள். ஒவ்வொரு சாதியிலும் இவ்விதம் அநேக தேவதைகளிருந்தன. அவைகளின் சக்தி, மேன்மை, பெருமை இவைகளுக்காக மனித சாதிகளுக்குள் போட்டி இருந்துகொண்டே இருந்தது. தங்கள் சாதித் தேவதைகளுக்குள்ளும் கூடச் சிறிது பெரிது என்ற தகராறு இருந்தது. பின்னால் யார் பெரியவர்? யார் பெரியவர்? என்று தேடியதின் பலனாய், உலகத்தை தோற்றுவித்த ஒரே கடவுள் தோற்றுவிக்கப் பட்டார். மனிதர்களின் மனோவளர்ச்சியோடு, கூடவே, மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்ட அந்த ஒரே கடவுளிடத்திலும் அனேக நல்ல குணங்கள் சேற்கப்பட்டன. இவ்விதம்தான் கடவுளின் உற்பத்தி ஏற்பட்டது. உண்மையில் கடவுள் மனிதனுடைய மானசீக புத்திரன்.

நான் ஜெயமதி வினாயகரை கொண்டுவந்தது போன்று, வேறு யாரேனும் வேறு ஒரு வினாயகரை முல்லைநகருக்கு கொண்டுவரலாம். கவலைப் படாதீர்கள் என்றேன் ராஜனிடம். 

நான் கூறியது போலவே 8-9-2001 அன்று முல்லைநகரில் ஜெயமதிவினாயகர் சிலை இருந்த பீடத்தை இடிக்காமல், அதற்கு அருகிலேயே, ஸ்ரீ மகா கணபதி ஆலயம், மணப்பாறை PNM.இராஜகோபால்நாயுடு அவர்களின் குமாரர் RS.மணி அவர்களால் நிறுவப்பட்டு, மகா கும்பாபிசேகமும், கோலாகலமாக நடந்தது.
இணைக்கப்பட்ட புகைப்படத்தில் இடதுபக்கம் கீழ்பகுதியில் உள்ள ஜெயமதிவினாயகர் பீடத்தை இப்போதும் நீங்கள் காணலாம்.


வாழ்க வளமுடன்.

மீண்டும் சந்திப்போம். -சரவணபவா .



   


       





Sunday, July 28, 2013

நினைவில் நின்றவை – 4..என்னை காத்த குர்ரான் ..

நினைவில் நின்றவை – 4

90 களில் நடந்ததது இது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரியாக  பணியிலிருந்தபோது, ஒருநாள் மதியவேளையில், பணிமனை முன்பு பயணிகளுடன் வந்த பேருந்து நின்றது. பயணி ஒருவர் டிக்கெட் வாங்க மறுக்கிறார் என்று நடத்துனர் புகார் செய்ய, நான் பேருந்தில் ஏறி பயணியிடம் டிக்கட் வாங்கும்படி கூறியவுடன், குடிபோதையில் இருந்த அந்த பயணி தரக்குறைவாக நடந்துகொண்டதால் அவரை கீழே இறக்கிவிட்டு பயணிகளுடன் பேருந்தை அதன் தடத்தில் அனுப்பியது. பின்னர் விசாரித்தத்தில் அவர் பெயர் கடலோசை காஜா, மேடை பேச்சாளர் என்று தெரியவந்ததால் எச்சரித்து அனுப்பியது.

மறுநாள் காலையில் எனது நண்பராகிய காவல்துறை அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பாபர் மசூதி இடிப்பு இந்து தீவிரவாதி என்றும் , இஸ்லாமியரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகவும் என்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஜமாத் மூலம் புகார் வந்துள்ளதால், உடன் விசாரணைக்கு காவல்நிலையம் வருமாறு கூறினார்.

உடன்காவல் நிலையம் சென்றேன். அங்கு ஜமாத்தினரும் இருந்தனர். அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் வணக்கம் கூறி, புகார் மனுவை வாங்கி படித்து பார்த்தேன். அதில் பாபர் மசூதி இடிப்பு இந்து தீவிரவாதியாக நான் சித்தரிக்கப் பட்டிருந்தேன்.
புகார்மனு பற்றி விளக்கம் கூற ஜமாத்தினரிடமும், காவல்துறை அதிகாரியிடமும் அனுமதி பெற்று, சில நிமிடம் தன்னிலை விளக்கம் கூறினேன்.:

என் அன்பிற்குரியவர்களே, பிறப்பால் நான் இந்துவாயினும், என்வீட்டில் கீதையுடன், பைபிள் மற்றும் குரான் புனிதநூலும் உள்ளது. சிறுவயதிலேயே மார்க்சியம் பயின்றவன். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி மனிதத்தை மட்டுமே நேசிப்பவன். நான் மதிக்கும் குரான் மீது ஆணையாக சொல்கிறேன்.  புகார் மனு உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது. புகார் அளித்தவர், புகாரில் உள்ளது உண்மைதான் என்று குரான் மீது சத்தியம் செய்துவிட்டால், நான் எந்த, தண்டனையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று கூறினேன்.

ஜமாத்தினரும் இதற்கு ஒப்புக்கொண்டு புகார் மனு அளித்தவரை அழைத்து, குரான் மீது ஆணையாக புகார்மனுவில் உள்ளது உண்மை என்று சத்தியம் செய்யுமாறு கூறினர்
அப்பொழுதுதான் அவரை கவனித்தேன். அவர்தான் கடலோசை காஜா என்று அறிந்தேன். அன்றொருநாள் டிக்கெட் வாங்க மறுத்து பேருந்தில் வந்து என்னால் இறக்கிவிடப்பட்டு எச்சரித்து அனுப்பட்டவர் அவர். ஆயினும் அவர் குரான் மீது ஆணையிட மறுத்துவிட்டார். ஜமாத்தினரின் கோபம் காஜாவின் மீது திரும்பியது.

பின்னர் ஜமாத்தினர் காஜாவின் பொய்புகார் மனுவிற்கு என்னிடம் வருத்தம் தெரிவித்து, காவல் துறையினரிடம் அளித்த புகார்மனுவையும் திரும்பபெற்றனர்.

எனது நண்பர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர் என்பதால், மனதளவில் சில குறைபாடுகள் உள்ள இஸ்லாமியர்கூட உண்மைக்கு புறம்பாக குரான் மீது ஆணையிடமாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிந்து இருந்தேன். இந்த நிகழ்வு அதனை உறுதி செய்தது

தீவிரவாதச் செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை. ஒரு உயிரை எடுப்பதற்கு இறைவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று குர்ஆன் சொல்கிறது. தீவிரவாதி எவனும் முஸ்லிம் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் அறியவேண்டியது அவசியம்.

என்னுடன் பொறியியல் கல்வி பயின்ற சிராஜ், பணிபுரிந்த பக்கிரி சுல்தான், சிகாகோவில் எனது 6 வயது பேரன் மிதுன் பாகிஸ்த்தான்தோழி ஜியா, எனது உயரதிகாரி அசீம், குடும்ப நண்பர் சலீம், மற்றும் நான் பெரிதும் மதித்து போற்றும் கவிகோ அப்துல் ரகுமான் —இவர்கள் அனைவருமே என் மனதில் இன்றும் பதிந்திருக்கிறார்கள்.

அன்பிற்குறியவர்களே, மதத்தின் பெயரால், மனிதத்தை பிரிப்பதை இனிமேலும் ஊக்கிகுவிக்காதீர்கள் 
,
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
     .

    

Thursday, July 25, 2013

நினைவில் நின்றவை – 3..சிறைக்கு சென்றேன் ...

நினைவில் நின்றவை – 3

1975 ல் ஜப்பானிய பென்சன் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நான் மதுரை புறவழிச்சாலையிலுள்ள போக்குவரத்து கழகத்தில், அலுவலக பணியில் இருந்தேன். நிறுவனத்தின் அனுமதி பெற்று ஊர்க்காவல் படையிலும் காவல்துறைக்கு துணையாக பணியாற்றினேன்.

எனது நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, நான் ஊர்க்காவல்படைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து எனது தலைமை அலுவலக பாதுகாப்பு பணிக்கு மறுநாள் காலை ஆஜராகும்படி உத்திரவு கிடைத்தது.

மார்க்சிய சிந்தனையாளனாகிய நான், எனது தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளாமல், எனது நிருவனத்தின் பாதுகாப்பு பணிக்கு செல்ல ஆயத்தமாவது அறிந்து எனது அண்ணன் அருணகிரிநாதன் (அவர் காங்கிரஸ் சிந்தனையாளர்) மகிழ்ச்சியடைந்தார்.

பின்னிரவு நேரம், மதுரை வடக்குமாசி வீதி 340 எண் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, கதவை தட்டிய ஒருவர், என்னிடம் சீல்வைத்த கவர் ஒன்றை கொடுத்து, தான் CITU அலுவலகத்திலிருந்து வருவதாகவும், தோழர் SM இந்தகவரை என்னிடம் கொடுக்க சொன்னதாகவும், கூறி சென்று விட்டார்.
இரவு 12 மணி, தூக்க கலக்கத்தில் கவரை உடைத்து படித்தேன்.

மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை சென்ட்ரல் பேருந்து நிலையம் சென்று, ( வேட்டி,, சட்டை ,உள்கால்சட்டை தோளில் சிவப்புதுண்டு அணிந்து, அருனாகயிறு தவிர்த்து ) தமிழக அரசே சிறை சென்ற போக்குவரத்து தொழிலாளர்களை விடுதலை செய், தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக – என்று கோசமிடவேண்டும் என்றும் அப்போது மேலும் சில தோழர்கள் என்னுடன் கலந்துகொள்வார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து செயல்படுமாறும் எழுதியிருந்த்து.

அண்ணனிடம் கடித்தை காட்ட , சிலமணி நேரத்திற்கு முன்பாக அவரிடமிருந்த மகிழ்ச்சி மறைந்தது .ஊர்க்காவல்படையா அல்லது CITU வா என்று முடிவெடுப்பது உன்விருப்பம் என்று கூறி படுத்துவிட்டார்.

CITU கடிதத்தில் உள்ளபடி,  மறுநாள் காலை 8 மணிக்கு பேருந்து நிலையம் சென்று சிறைசென்ற தொழிலாளர்களை விடுதலை செய்ய கோசமிட்டபோது எங்கிருந்தோ மேலும் சில தோழர்கள் வந்து என்னுடன் சேர்ந்தனர்

மதுரை சென்ட்ரல் பேருந்து நிலைய இரும்புகேட்டை காலை 8.30 மணிக்கு இழுத்து பூட்டினேன். உடன் தோழர் ராஜு CI உதவினார். இதனால் சென்ட்ரல்-சொக்கிகுளம் பயணிகள் நகர் பேருந்து இயக்கம் தடைப்பட்டது அந்த பேருந்தில், வடக்குமாசிவீதியில் வெண்மனி டீ கடை வைத்து அதிகாலையில் விற்பனை செய்யும் தோழர் முத்தையா தற்செயலாக வந்துள்ளார்.

நாங்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்திரவுப்படி, மதுரை மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டோம். அங்குதான் தோழர் குட்டப்பன், தோழர் சிசல்ராஜ், தோழர் சாந்தாபிள்ளை ஆகியோருடன், அரசுநாச்சியப்பன், திருப்பெருந்துறை ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. சிறைச்சாலையில் இருந்தபோது பார்வையாளர் அனுமதிசீட்டு மூலம் தோழர் SAP, மற்றும் தோழர் SM ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது

அன்றய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் எமர்ஜன்சி மறுநாள் அமலுக்கு வருவதால், தமிழக அரசு திடீரென எங்களை விடுதலை செய்து, மறுநாள் வழக்கம் போல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று பணியை தொடங்கினேன்.

ஊர்காவல் படையினர் எந்தஒரு அரசியல் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதால் அந்த பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். ஊர்காவல்படையை சேர்ந்த அமல்ராஜ், மாணிக்கம் ஏட்டு, RSI ஜெயராமன், DSP ராவுத்தர், ஏரியாகமாண்டர் கண்ணாயிரம் இன்னும் பல அருமையான மனிதர்களின் பிரிவு பின்னர் என்னை மிகவும் பாதித்தது விசயதிற்கு வருகிறேன்..

வடக்குமாசிவீதி பால் கடையில் தினமும் காலையில் வரிசையில் நின்று பால் வாங்க நிற்பதுபோல் அன்றும் எனது தாய். வழக்கம்போல நீண்ட வரிசையில் இருந்தபோது, கடையின் உரிமையாளர் எனது தாயை அழைத்து, இனிமேல் நீங்க வரிசையில் நிற்ககூடாது, எப்பவந்தாலும் முதல்ல வந்து பால் வாங்குங்க என்று கூற, இதுவரை முரட்டுத்தனமான அவரது தோற்றத்தை பார்த்து பயந்திருந்த எனது தாய், அவரை பார்த்து தைரியமாக ஒரு கேள்வியை கேட்டார்..

எனக்குமட்டும் ஏம்பா இந்த திடீர் சலுகை. அதற்கு உன் மகன்தான் காரணம் என்றார். அருணகிரியா? இல்லை. சாமிநாதனா? இல்லை. சங்கரநாரயணனா? இல்லை என்று என் அண்ணன் தம்பிகளை மட்டுமே என் தாய் கேட்டபோது அவர் என் தாயிடம் அன்று கூறியதுதான் இன்றும் எனது நினைவில் நின்றவை – 3..அது இதோ… 

என்னைபொறுத்தவரை அவங்கெல்லாம் உங்களுக்கு பிள்ளை கிடையாது, உங்களுக்கு ஒரே பிள்ளைதான் தோழர் சரவணபவா சகதொழிலாளர்களுக்காக கைதுசெய்ய்யபட்டு, சிறைக்கு செல்வதை, தற்செயலாக பார்க்கநேர்ந்தது வடக்குமாசிவீதியிலேயே நான் மட்டுமே தோழர் என்று நிணைதுக் கொண்டிருந்தேன், உங்க மகனை போல படித்தவர்களும் தோழராக இருப்பது அறிந்து பெருமைப் படுகிறேன். இனி அவருக்கு மட்டுமல்ல எனக்கும் நீங்கதான் தாய்.

என்று பலர் முன்னிலையில் என் தாய் என்னால் பெருமைப்பட்டு, பால்வாங்கி, வீடு திரும்பியதும் என்னை பார்த்த பார்வை..அது அர்த்தம் நிறைந்தது.


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா

Wednesday, July 24, 2013

நினைவில் நின்றவை – 2 ..தோழர் மோகன் - மறுபக்கம்.

நினைவில் நின்றவை – 2

1965 மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் SSLC வெற்றிகரமாக முடித்துவிட்டு, மதுரை கல்லூரியில் PUC 1sttGroup ல் சேர்ந்தேன். அதில் கெமிஸ்ட்ரி என்னை ரொம்பவே சோதித்துவிட்டது.

தேர்வுத்தாளில் புன்சன்பர்னர்,, கண்ணாடி குடுவை, சோதனைகுழாய் போன்ற சம்பதப்பட்ட உபகரணங்களை மிக அழகாக, நிதானமாக கலர்கொடுத்து படம் வரைந்து, கீழே எழுத ஆரம்பித்தால்.. புன்சன் பர்ணரை எடுத்து பற்றவைத்து,அதன்பின் ஒரு கண்ணாடி குடுவையை எடுத்துகொண்டு, அதில்…..அதன்பிறகு எதுவுமே நினைவிற்கு வராது.

அதிலும் முக்கியமாக ஈக்குவேசன் ரொம்பவே படுத்தும். மத்தவங்க மட்டும் எப்படி அதை நிணைவில் வைத்திருக்கிறார்கள் என்பது புதிராகவே இருந்தது. பிறகு திருத்தப்பட்ட சிங்கிள் மார்க் விடைத்தாளுடன் பேராசிரியரிடம் சென்று, எவ்வளவு கஸ்டப்பட்டு அழகாக கலர்கொடுத்து புன்சன்பர்ணர், குடுவை வரைந்திருக்கிறேன். வகுப்பிலேயே நான்தான் நல்லா வரைந்திருக்கிறேன். ஈக்குவேசன் மட்டுமே மறந்துவிட்ட்து. .அதுக்குமட்டும் கொஞ்சம் மார்க் குறைச்சுட்டு, நல்லா மார்க் போடுங்க சார். இல்லாட்டி அப்பா திட்டுவாங்க என்றது பழய கதை.

என்னை படுத்திய சயன்ஸ் துறை பேராசிரியை  ஒருவரே. பின்னாளில் 14-6-1979 ல் என் வாழ்க்கை துணையானது ஆச்சரியமானது. சரி.. விசயத்திற்கு வருகிறேன்.

மதுரை வடக்குமாசி வீதி 340 எண் வீட்டில்தான் நான் பிறந்தேன். 1966 ல் PUC தேறாமல், 1968ல் பொறியியல் வகுப்பில் சேறும்வரை இடைப்பட்ட காலத்தில்தான் நான் கற்றவையும் பெற்றவையும் அதிகம். ஜெயராமன், ஜவஹர், பிச்சுமணி, வள்ளிநாயகம் – நண்பர்களுடன் வடக்குமாசிவீதியில் கபடி, கிட்டிபுல், கோலி, பழய தந்தி பேப்பரை பந்தாக உருட்டி சைக்கிள் டியுப் கட்செய்த துண்டுகளை அதன்மேல் இணைத்து, புட்பால், வைகை ஆற்றில் குளியல், அதன்பிறகு எங்கள் சங்கப்பலகை ( வடக்குமாசிவீதி முனிசிபல் ஆரம்ப்பள்ளி திண்னை ) 

படிப்பும் இல்லாமல், வேலையும் இல்லாமல், சங்கப்பலகையில் தினமும் மாலை நேரத்தில், நண்பர்களுடன் பொழுது கடந்தது அங்குதான் 1968 மே முதல் நாள். இனிய மாலை பொழுது. செஞ்சட்டை அணிந்து, செங்கொடி ஏந்தி மிகஒழுக்கமாக பொதுமக்களுக்கு இடையூறின்றி தொழிலாளர்கள் ஊர்வளம். ,வடக்குமாசிவீதியில் வந்ததை பார்த்தேன்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்…
அமெரிக்க ஏகாதிபத்தியமே வியட்நாமைவிட்டு வெளியேறு…

சீராக கோசமிட்டு வந்தது என்னை ஈர்த்தது!

அமெரிக்கா எங்கு இருக்கிறது? வியட்நாம் எங்கு இருக்கிறது? வடக்குமாசிவீதி எங்கு இருக்கிறது? இங்கே கோசமிட்டால் அங்கே கேட்குமா? நாம வேலைவெட்டி இல்லாம இங்கே சும்மா இருக்கிறோம். அதைபத்தி கவலைப்படாமல், எங்கொ இருக்கிற வியட்நாமியரை பற்றி இவர்கள் கவலைப் படுகிறார்களே.. என்று நண்பர்களுடன் விசனப்பட்டபோது..

இதனை கேட்ட வழிபோக்கர் ஒருவர், 25 வயது இருக்கும், தோழரே என்று என்னை அழைத்தார்.
மனிதஇனத்திற்கு உலகின் எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய குரல்கொடுப்பது மார்க்சிஸ்ட்களின் வழக்கம்.. என்றும் இன்னும் பலவும் இதமாக எடுத்துக்கூறினார். எளிமையான, தன்மையான அவர் தோற்றம், நடத்தை என்னை ஈர்த்தது தான் மதுரைமில் தொழிலாளி, ஆரப்பாளையத்தில் குடியிருப்பதாகவும்,, நாளை மீண்டும் சங்கபலகையில் சந்திப்பதாகவும் கூறி சென்றுவிட்டார்..
 
மறுநாள் அதேஇடம் அதே நேரம் அதேநபர், கையில் சில புத்தகங்கள்- நண்பர்களுடன் இருந்த என்னை சந்தித்து, கைகொடுத்து, தோழரே என்பெயர் மதுசூதனன். தோழர் மது என்றால் ஆரப்பாளையம் பகுதியில் தெரியும். காஸ்ட்ரோ படிப்பகம் அங்கு இருக்கிறது. அவ்வப்போது அங்கு வந்து உலகத்தை படியுங்கள். இப்போது இந்த புத்தகங்களை படியுங்கள். என்று கூறி புத்தகங்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வால்காவிலிருந்து கங்கைவரை
உன் அடிச்சுவட்டில் நான்
வீரம் விளைந்தது
பொதுவுடமைதான் என்ன?
தாய்

அவர் கொடுத்த அந்த புத்தகங்கள் தற்போதும் என்படிப்பறையில் உள்ளது. பிற ஆயிரக்கணக்கான புத்தங்களையும் பின்னாளில் காவல்கோட்டம் ஞானபீட விருது பெற்ற தோழர் வெங்கடேசன், மதுரை திருப்பரங்குன்றம் தழல் நூலகத்தை திரு ஜெயகாந்தன் திறந்துவைத்தபோது, அதற்கு எடுத்து சென்றுவிட்டார். சரி விசயத்துக்கு வருகிறேன்.
.
அந்த புத்தகங்கள திரும்ப, திரும்ப படித்தும் மீண்டும் மீண்டும்  அதன் பாத்திரங்கள் என்னை பிரிய மறுத்தன. ஒருவழியாக அதனை திரும்ப கொடுக்க, மதுரை ஆரப்பாளையம் காஸ்ட்ரோ படிப்பகம் சென்றேன். படிப்பகத்தின் முன்புள்ள தகவல் பலகையில், என்வயதையொத்த வாலிபர் ஒருவர், தனது இடது கையில் இருந்த தான் படித்து குறிப்பு எழுதியவைகளை (அத்தகய அவர் குறிப்பு நோட்டு ஒன்று என்னிடம் தற்போதும் உள்ளது.) எழுதிக்கொண்டிருந்தார்.

எழுதிமுடித்தவர் என்னை கவனித்து தோழரே என்று என்னை அழைத்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். புத்தகதை கொடுத்தவரும் என்னை தோழர் என்கிறார், புத்தகத்தை கொடுக்கவண்டியவரும் என்னை தோழர் என்கிறார். பொதுவாக மதுரையில் அண்னே, தம்பி, அக்கா, தங்கச்சி, அம்மா, அப்பா என்றுதான் அழைப்பார்கள். இவர்களோ – சிறியவர், பெரியவர், ஆண், பெண், ஏழை பணக்காரன் வேறுபாடின்றி எல்லொரையும் தோழர் என்றே அழைக்கிறார்களே—அந்த தோழர் என்ற அழைப்பும் என்னை ஈர்த்தது தன்னை மோகன் என்று அறிமுகபடுத்தி கொண்டார். சரவணபவா என்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன்.

இதுநடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள். தலைநகர் டில்லி, பாராளுமன்ற குடியிருப்பு பகுதி. எனது இளமைக்கால சங்கப்பலகை-வடக்குமாசிவீதி, மதுரை மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் தேர்வு செய்ய்யபட்ட அந்த தோழரின் இல்லத்தில் அவரை சந்தித்து, அங்குள்ள அவரது விருந்தினர் அறையிலேயே 20 நாட்கள் நானும் என்மணைவியும் தங்கினோம்.

அவரது ராஜஸ்தான் சமையல்காரர் லால் 20 நாட்களும் அந்த தோழருடன் எங்களுக்கும் உணவளித்தது மறக்கமுடியாத நிகழ்வாகும் அவர்தான் 35 ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ட்ரோ படிப்பகத்தில் நான் சந்தித்த தோழர் மோகன் MP. 

ஒருநாள் டில்லி பாராளுமன்றதிற்கு அவரது பிரதிநிதிகளாக பார்வையாளர் பகுதியில் அமர்ந்து, பாராளுமன்ற நிகழ்சிகளை கவனித்துவிட்டு திரும்பியவுடன், இரவு சாப்பாட்டு நேரத்தில் நானும் என்மணைவியும் ( அவரது மணைவி படித்தபோது மதுரை மீனாக்ஷி அரசினர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) அவருடன் பேசியதில்…

நீங்கமட்டும் அமைதியா, பொறுமையா, அடக்கமா, பண்பா இருக்கீங்க. உங்ககுணம் கம்யூனிஸ்ட்னு சொல்லிக்கிற இவர்ட்ட மட்டும் இல்லையே என்று என்னைபற்றி என்மணைவி தோழர் மோகனிடம் விமர்சனம் செய்தபோது அவர்கூறியது….

நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு. மோகனின் ஒருபக்கத்தைத்தான் இந்த 20 நாளில் நீங்க பார்த்திருக்கீங்க..எனது போர்க்குணம் உங்களுக்கு தெரியாது. அதேபோல்தான் தோழர் சரவணபவா போர்க்குணம் மட்டுமே உங்கள் பார்வையில் படுகிறது அவரது மறுபக்கம் அமைதி, பொறுமை, அடக்கம், பண்பு இவைகளை 35 ஆண்டுகளாக அனைத்து தோழர்களும் அறிவோம். அவரும் நல்ல கம்யூனிஸ்ட்தான். நான் மக்கள் ஊழியன்.  அவர் அரசு ஊழியன் அவ்வளவுதான் வேறுபாடு....

இதுதான் என் நினைவில் நின்றவை – 2

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா

Tuesday, July 23, 2013

நினைவில் நின்றவை –1..பிறப்பா? வளர்ப்பா?

நினைவில் நின்றவை – 1

வருடம் 1958. ஒரு பொன்மாலைப் பொழுது. மதுரை மீனக்ஷி அம்மன் கோவில், வடக்கு ஆடிவீதி திருவள்ளுவர் கழகம்... சங்கம் முழங்கும் திரு மதுரைதனில்….என்று அங்கு அப்போது என் ஐந்தாவது வகுப்பு தோழன் TN சேசகோபாலன் முழங்கிகொண்டிருந்தான்.. எனது அப்பா கணபதியப்பன், ( மதுரை, சம்பந்தமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் ), அவரது நண்பர் புலவர் செல்வகணபதி ஆகியோருடன் நானும் எனது நண்பனின் பாட்டில் மெய்மறந்து நின்றவேலையில், எனது சிஷ்யன் சேசகோபாலன் பாட்டு எப்படி? என்று எனது அப்பா தனது நண்பரிடம் பெருமையாக கேட்க, அதற்கு அவர் சொன்னதுதான் இன்றும் என் நினைவில் நின்றது.

என்ன கணபதி, உன்பள்ளி மாணவன் சேசகோபாலன் நன்றாக பாடுவது உன்முயற்சியால் மட்டும் அல்ல. அவன் ஒழுக்கமான பிராமணன். பிராமணனின் ஜீனிலேயே திறமை கலந்துள்ளது. உனக்குத்தான் நான்கு பசங்க இருக்காங்களே, அவங்கள்ள ஒருத்தனையாவது இப்படி பாடவைத்தால், நீ பெருமை படுவதில் அர்த்தம் இருக்கும் – என்று கூற, கூட்டம் கலைந்து, வீட்டிற்கு வந்ததும், நாங்க நாலுபேரையும் உட்காரவைத்து, பாடச்சொல்லி, தேர்வு வைத்து, சேசகோபாலன் நண்பனாகிய என்னை, ஞானசூனியம் என்று என் அப்பா ஒதுக்கிவிட்டார். பின்னொருநாள் …

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், வடக்கு ஆடி வீதி, திருவள்ளுவர் கழகத்தில், எனது அண்ணன் அருணகிரிநாதன், சங்கம் முழங்கும் திரு மதுரைநகர் தனில் என்று நன்றாகவே பாடி என் அப்பாவை  பெருமைப்பட வைத்தது தனி கதை. சாமிநாதன், சங்கரநாராயணன் – எனது இரு தம்பிகளும் இசை பயின்றபோது, நான் பெரியார், மார்க்ஸ் பயில ஆரம்பித்தேன்.

இப்போது 37 ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைக்கிறேன். 1995 ல் ஜானி எனக்கு அறிமுகம். பூர்வீகம் ராஜபாளையம். 10 நாள் குட்டி ஆயினும் முரட்டுத்தனம். என்வீட்டு காவல் பணிக்கு நியமித்தேன். மதுரை ஆயுதபடை குடியிருப்பில், நாய்களுக்கு பயிற்ச்சி அளிப்பவர், எனது நண்பர் ராம்மூர்த்தி. ஜானிக்கு பயிற்சியளிக்க அழைத்தேன் அவரை. அவரும் வந்தார். ஜானியை பார்த்தார். அப்போது அவர் கூறியது…
.
நாய்குட்டி பிறந்து 40 நாட்கள் சென்றபின்புதான், அதற்கு பயிற்சியளிக்க முடியும். அதுவும் ஜெர்மன் செப்பேர்டு குட்டிகளுக்குத்தான் பயிற்சியளிக்க முடியும்.அவை ஹிட்லர் தனது போர்படையில் பயன்படுத்திய உயர்ஜாதி வகை. ராஜபாளையம் வேட்டைக்குத்தான் லாயக்கு. கீழ்படியும் குணம் குறைவு. பயிற்சியை ஏற்றுகொள்ளாது. நானும் இதுவரை ஜெர்மன் செப்பேர்டு குட்டிகளுக்குத்தான் 2 மாத பயிற்சி கொடுத்துள்ளேன். ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்குட்டிகளுக்கு இதுவரை நான் பயிற்சி கொடுத்த்தில்லை. அது சிறமம்.-அதற்கு நான் கூறியது அவரை சிந்திக்க வைத்த்து.அது

உயர்ந்த ஜாதிக்கு 2 மாதம் பயிற்சின்னா, ராஜபாளையத்திற்கு 4 மாதம் பயிற்சி கொடுங்க. பயிற்சி கட்டணம் இருமடங்கு அதிகமாக தருகிறேன். நீயும் நானும் உயர்ந்த ஜாதி என்று பட்டயத்தில் இல்லை. அதுபோல் இந்த ராஜபாளையம் குட்டியும், ஷெப்பேர்டை விட தாழ்ந்தஜாதி என்று  பட்டயத்தில் இல்லை. சிரமத்தைப் பாராமல் முயற்சிப்போம். என்று உற்ச்சாகப்படுத்தி, 4 மாத பயிற்சியும் முடிந்தது.

பயிற்சிக்குப்பின் ஜானியின் செயல்பாடுகள் மிக அற்புதம் அறிவு பூர்வமானது, வீரம் செரிந்தது. கட்டளைக்கு கீழ்படியும் தன்மை அதிகம். குடும்ப உருப்பினராகிவிட்ட ஜானியை 11 ஆண்டுகள் கழித்து, ஒருவாரம் சென்னையில் அத்யாவசிய பணியின் காரணமாக பிரிய நேர்ந்தது 7 நாட்களுக்குப்பின் மதுரை வீட்டிற்கு திரும்பியபோது, ஜானி சோர்வாக வரவேற்றது. உடல் மெலிந்து இருந்தது. வயிற்றுபகுதியில் தோல் சிவந்திருந்த்து. என். 7 நாள் பிரிவை தாங்கமுடியாமல், உணவு அருந்தாமல்,

குறைக்கும் சக்தியையும் இழந்திருந்த்து. 11 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த ஜானி சிரமப்படுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஜானியின் டாக்டர் சங்கரலிங்கம் சிகிச்சையளித்தும் தேறவில்லை. எவ்வளவுதான் உயர்தர சிகிச்சை அளித்தாலும், ஜானி 2 மாதத்தை கடப்பது கடினம்..குணமும் ஆகாது. என்று ஜானியின் டாக்டர் கைவிரித்துவிட்டார்.

2006 ல் ஒரு ஆம்புலன்சில் ஜானியை ஏறும்படி கட்டளையிட்டதுதான், எனது கடைசி கட்டளை. அதுவும் கட்டளைக்கு கீழ்படிந்து அம்புலன்சில் ஏறியது. அனுப்பானடி கண்மாய்கரையில் ஜானியை இறக்கி, விசவூசி போட்டு, கருணைக் கொலை செய்து, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்மூலம் நான் சொல்வது ஒன்றுதான்.. மனிதனோ, மிருகமோ, உயரம் எட்டுவதற்கு பிறப்பு அவசியமில்லை. வளர்ப்புதான் அவசியம். உயர்கல்வி கிடைத்திருந்தால் நான் மேலும் உயரத்தை எட்டியிருப்பேன். ( ISRO விஞ்ஞானி வாய்ப்பை ஆங்கில மொழி புலமையின்றி தவரவிட்டவன் நான் ).

சங்கம் முழங்கும் திரு மதுரைநகர்தனில் இப்போதும் தினமும் நான் எனது மடிக்கணனியில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனது 5 ம் வகுப்பு தோழன் TN.சேசகொபாலன் தற்போது தமிழகத்தின் பிரபல சங்கீத வித்வானாக சென்னையில் ஜொலிக்கிறார். எனது அண்ணன் அருணகிரிநாதன் திருநெல்வேலியில் TVS பணிமேலாலராக சிறந்த முறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, அங்குள்ள கோவில்களில், விழாக்காலங்களில் தன் இசையால் இறைவனை மகிழ்வித்து வருகிறார்

TMS அவர்களின் அந்தகாலத்து தனிப்பாடல் – சங்கம் முழங்கும் திருமதுரை நகர்தனில் – பாடலை எனது அண்ணன் அருணகிரிநாதனின்,, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி தோழரும், எங்கள் குடும்ப நண்பருமான ஸ்ரீமூலநாதன் ( தற்போது சென்னை, மும்பை டெல்லி, அமெரிக்கா என்று எங்கோ இருக்கிறார் ) அவர்கள்தான் எனது மெயிலுக்கு ( bhava1948@gmail.com ) சமீபத்தில் அனுப்பியுள்ளார். நன்றி அண்னா…

அனுப்பிய பாடல் ஒலி தேய்ந்துள்ளதால், உங்களிடம் நல்லநிலையில் இருந்தால் ,அந்த பாடலை எனது மெயிலுக்கு அனுப்பிவையுங்களேன். உங்களுக்கும் மிக்க நன்றி.


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா