நினைவில் நின்றவை – 4
90 களில் நடந்ததது இது. தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழக அதிகாரியாக பணியிலிருந்தபோது,
ஒருநாள் மதியவேளையில், பணிமனை முன்பு பயணிகளுடன் வந்த பேருந்து நின்றது. பயணி
ஒருவர் டிக்கெட் வாங்க மறுக்கிறார் என்று நடத்துனர் புகார் செய்ய, நான் பேருந்தில்
ஏறி பயணியிடம் டிக்கட் வாங்கும்படி கூறியவுடன், குடிபோதையில் இருந்த அந்த பயணி
தரக்குறைவாக நடந்துகொண்டதால் அவரை கீழே இறக்கிவிட்டு பயணிகளுடன் பேருந்தை அதன்
தடத்தில் அனுப்பியது. பின்னர் விசாரித்தத்தில் அவர் பெயர் கடலோசை காஜா, மேடை
பேச்சாளர் என்று தெரியவந்ததால் எச்சரித்து அனுப்பியது.
மறுநாள் காலையில் எனது நண்பராகிய
காவல்துறை அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பாபர் மசூதி இடிப்பு இந்து
தீவிரவாதி என்றும் , இஸ்லாமியரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகவும் என்மீது
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஜமாத் மூலம் புகார் வந்துள்ளதால், உடன்
விசாரணைக்கு காவல்நிலையம் வருமாறு கூறினார்.
உடன்காவல் நிலையம் சென்றேன். அங்கு
ஜமாத்தினரும் இருந்தனர். அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் வணக்கம் கூறி, புகார்
மனுவை வாங்கி படித்து பார்த்தேன். அதில் பாபர் மசூதி இடிப்பு இந்து தீவிரவாதியாக
நான் சித்தரிக்கப் பட்டிருந்தேன்.
புகார்மனு பற்றி விளக்கம் கூற
ஜமாத்தினரிடமும், காவல்துறை அதிகாரியிடமும் அனுமதி பெற்று, சில நிமிடம் தன்னிலை
விளக்கம் கூறினேன்.:
என் அன்பிற்குரியவர்களே, பிறப்பால்
நான் இந்துவாயினும், என்வீட்டில் கீதையுடன், பைபிள் மற்றும் குரான் புனிதநூலும்
உள்ளது. சிறுவயதிலேயே மார்க்சியம் பயின்றவன். ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி
மனிதத்தை மட்டுமே நேசிப்பவன். நான் மதிக்கும் குரான் மீது ஆணையாக சொல்கிறேன். புகார் மனு உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது.
புகார் அளித்தவர், புகாரில் உள்ளது உண்மைதான் என்று குரான் மீது சத்தியம்
செய்துவிட்டால், நான் எந்த, தண்டனையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று கூறினேன்.
ஜமாத்தினரும் இதற்கு ஒப்புக்கொண்டு
புகார் மனு அளித்தவரை அழைத்து, குரான் மீது ஆணையாக புகார்மனுவில் உள்ளது உண்மை
என்று சத்தியம் செய்யுமாறு கூறினர்
அப்பொழுதுதான் அவரை கவனித்தேன்.
அவர்தான் கடலோசை காஜா என்று அறிந்தேன். அன்றொருநாள் டிக்கெட் வாங்க மறுத்து
பேருந்தில் வந்து என்னால் இறக்கிவிடப்பட்டு எச்சரித்து அனுப்பட்டவர் அவர். ஆயினும்
அவர் குரான் மீது ஆணையிட மறுத்துவிட்டார். ஜமாத்தினரின் கோபம் காஜாவின் மீது
திரும்பியது.
பின்னர் ஜமாத்தினர் காஜாவின்
பொய்புகார் மனுவிற்கு என்னிடம் வருத்தம் தெரிவித்து, காவல் துறையினரிடம் அளித்த
புகார்மனுவையும் திரும்பபெற்றனர்.
எனது நண்பர்களில் பெரும்பாலோர்
இஸ்லாமியர் என்பதால், மனதளவில் சில குறைபாடுகள் உள்ள இஸ்லாமியர்கூட உண்மைக்கு
புறம்பாக குரான் மீது ஆணையிடமாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிந்து இருந்தேன்.
இந்த நிகழ்வு அதனை உறுதி செய்தது
தீவிரவாதச் செயல்களை
இஸ்லாம் ஆதரிப்பதில்லை. ஒரு உயிரை எடுப்பதற்கு
இறைவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று குர்ஆன் சொல்கிறது. தீவிரவாதி எவனும் முஸ்லிம் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் அறியவேண்டியது அவசியம்.
என்னுடன் பொறியியல் கல்வி பயின்ற சிராஜ், பணிபுரிந்த பக்கிரி சுல்தான், சிகாகோவில் எனது 6 வயது பேரன் மிதுன் பாகிஸ்த்தான்தோழி ஜியா,
எனது உயரதிகாரி அசீம், குடும்ப நண்பர் சலீம், மற்றும் நான் பெரிதும் மதித்து போற்றும் கவிகோ அப்துல் ரகுமான் —இவர்கள் அனைவருமே என் மனதில் இன்றும் பதிந்திருக்கிறார்கள்.
அன்பிற்குறியவர்களே, மதத்தின் பெயரால், மனிதத்தை பிரிப்பதை இனிமேலும் ஊக்கிகுவிக்காதீர்கள்
,
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
.