Followers

Wednesday, July 24, 2013

நினைவில் நின்றவை – 2 ..தோழர் மோகன் - மறுபக்கம்.

நினைவில் நின்றவை – 2

1965 மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் SSLC வெற்றிகரமாக முடித்துவிட்டு, மதுரை கல்லூரியில் PUC 1sttGroup ல் சேர்ந்தேன். அதில் கெமிஸ்ட்ரி என்னை ரொம்பவே சோதித்துவிட்டது.

தேர்வுத்தாளில் புன்சன்பர்னர்,, கண்ணாடி குடுவை, சோதனைகுழாய் போன்ற சம்பதப்பட்ட உபகரணங்களை மிக அழகாக, நிதானமாக கலர்கொடுத்து படம் வரைந்து, கீழே எழுத ஆரம்பித்தால்.. புன்சன் பர்ணரை எடுத்து பற்றவைத்து,அதன்பின் ஒரு கண்ணாடி குடுவையை எடுத்துகொண்டு, அதில்…..அதன்பிறகு எதுவுமே நினைவிற்கு வராது.

அதிலும் முக்கியமாக ஈக்குவேசன் ரொம்பவே படுத்தும். மத்தவங்க மட்டும் எப்படி அதை நிணைவில் வைத்திருக்கிறார்கள் என்பது புதிராகவே இருந்தது. பிறகு திருத்தப்பட்ட சிங்கிள் மார்க் விடைத்தாளுடன் பேராசிரியரிடம் சென்று, எவ்வளவு கஸ்டப்பட்டு அழகாக கலர்கொடுத்து புன்சன்பர்ணர், குடுவை வரைந்திருக்கிறேன். வகுப்பிலேயே நான்தான் நல்லா வரைந்திருக்கிறேன். ஈக்குவேசன் மட்டுமே மறந்துவிட்ட்து. .அதுக்குமட்டும் கொஞ்சம் மார்க் குறைச்சுட்டு, நல்லா மார்க் போடுங்க சார். இல்லாட்டி அப்பா திட்டுவாங்க என்றது பழய கதை.

என்னை படுத்திய சயன்ஸ் துறை பேராசிரியை  ஒருவரே. பின்னாளில் 14-6-1979 ல் என் வாழ்க்கை துணையானது ஆச்சரியமானது. சரி.. விசயத்திற்கு வருகிறேன்.

மதுரை வடக்குமாசி வீதி 340 எண் வீட்டில்தான் நான் பிறந்தேன். 1966 ல் PUC தேறாமல், 1968ல் பொறியியல் வகுப்பில் சேறும்வரை இடைப்பட்ட காலத்தில்தான் நான் கற்றவையும் பெற்றவையும் அதிகம். ஜெயராமன், ஜவஹர், பிச்சுமணி, வள்ளிநாயகம் – நண்பர்களுடன் வடக்குமாசிவீதியில் கபடி, கிட்டிபுல், கோலி, பழய தந்தி பேப்பரை பந்தாக உருட்டி சைக்கிள் டியுப் கட்செய்த துண்டுகளை அதன்மேல் இணைத்து, புட்பால், வைகை ஆற்றில் குளியல், அதன்பிறகு எங்கள் சங்கப்பலகை ( வடக்குமாசிவீதி முனிசிபல் ஆரம்ப்பள்ளி திண்னை ) 

படிப்பும் இல்லாமல், வேலையும் இல்லாமல், சங்கப்பலகையில் தினமும் மாலை நேரத்தில், நண்பர்களுடன் பொழுது கடந்தது அங்குதான் 1968 மே முதல் நாள். இனிய மாலை பொழுது. செஞ்சட்டை அணிந்து, செங்கொடி ஏந்தி மிகஒழுக்கமாக பொதுமக்களுக்கு இடையூறின்றி தொழிலாளர்கள் ஊர்வளம். ,வடக்குமாசிவீதியில் வந்ததை பார்த்தேன்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்…
அமெரிக்க ஏகாதிபத்தியமே வியட்நாமைவிட்டு வெளியேறு…

சீராக கோசமிட்டு வந்தது என்னை ஈர்த்தது!

அமெரிக்கா எங்கு இருக்கிறது? வியட்நாம் எங்கு இருக்கிறது? வடக்குமாசிவீதி எங்கு இருக்கிறது? இங்கே கோசமிட்டால் அங்கே கேட்குமா? நாம வேலைவெட்டி இல்லாம இங்கே சும்மா இருக்கிறோம். அதைபத்தி கவலைப்படாமல், எங்கொ இருக்கிற வியட்நாமியரை பற்றி இவர்கள் கவலைப் படுகிறார்களே.. என்று நண்பர்களுடன் விசனப்பட்டபோது..

இதனை கேட்ட வழிபோக்கர் ஒருவர், 25 வயது இருக்கும், தோழரே என்று என்னை அழைத்தார்.
மனிதஇனத்திற்கு உலகின் எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய குரல்கொடுப்பது மார்க்சிஸ்ட்களின் வழக்கம்.. என்றும் இன்னும் பலவும் இதமாக எடுத்துக்கூறினார். எளிமையான, தன்மையான அவர் தோற்றம், நடத்தை என்னை ஈர்த்தது தான் மதுரைமில் தொழிலாளி, ஆரப்பாளையத்தில் குடியிருப்பதாகவும்,, நாளை மீண்டும் சங்கபலகையில் சந்திப்பதாகவும் கூறி சென்றுவிட்டார்..
 
மறுநாள் அதேஇடம் அதே நேரம் அதேநபர், கையில் சில புத்தகங்கள்- நண்பர்களுடன் இருந்த என்னை சந்தித்து, கைகொடுத்து, தோழரே என்பெயர் மதுசூதனன். தோழர் மது என்றால் ஆரப்பாளையம் பகுதியில் தெரியும். காஸ்ட்ரோ படிப்பகம் அங்கு இருக்கிறது. அவ்வப்போது அங்கு வந்து உலகத்தை படியுங்கள். இப்போது இந்த புத்தகங்களை படியுங்கள். என்று கூறி புத்தகங்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வால்காவிலிருந்து கங்கைவரை
உன் அடிச்சுவட்டில் நான்
வீரம் விளைந்தது
பொதுவுடமைதான் என்ன?
தாய்

அவர் கொடுத்த அந்த புத்தகங்கள் தற்போதும் என்படிப்பறையில் உள்ளது. பிற ஆயிரக்கணக்கான புத்தங்களையும் பின்னாளில் காவல்கோட்டம் ஞானபீட விருது பெற்ற தோழர் வெங்கடேசன், மதுரை திருப்பரங்குன்றம் தழல் நூலகத்தை திரு ஜெயகாந்தன் திறந்துவைத்தபோது, அதற்கு எடுத்து சென்றுவிட்டார். சரி விசயத்துக்கு வருகிறேன்.
.
அந்த புத்தகங்கள திரும்ப, திரும்ப படித்தும் மீண்டும் மீண்டும்  அதன் பாத்திரங்கள் என்னை பிரிய மறுத்தன. ஒருவழியாக அதனை திரும்ப கொடுக்க, மதுரை ஆரப்பாளையம் காஸ்ட்ரோ படிப்பகம் சென்றேன். படிப்பகத்தின் முன்புள்ள தகவல் பலகையில், என்வயதையொத்த வாலிபர் ஒருவர், தனது இடது கையில் இருந்த தான் படித்து குறிப்பு எழுதியவைகளை (அத்தகய அவர் குறிப்பு நோட்டு ஒன்று என்னிடம் தற்போதும் உள்ளது.) எழுதிக்கொண்டிருந்தார்.

எழுதிமுடித்தவர் என்னை கவனித்து தோழரே என்று என்னை அழைத்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். புத்தகதை கொடுத்தவரும் என்னை தோழர் என்கிறார், புத்தகத்தை கொடுக்கவண்டியவரும் என்னை தோழர் என்கிறார். பொதுவாக மதுரையில் அண்னே, தம்பி, அக்கா, தங்கச்சி, அம்மா, அப்பா என்றுதான் அழைப்பார்கள். இவர்களோ – சிறியவர், பெரியவர், ஆண், பெண், ஏழை பணக்காரன் வேறுபாடின்றி எல்லொரையும் தோழர் என்றே அழைக்கிறார்களே—அந்த தோழர் என்ற அழைப்பும் என்னை ஈர்த்தது தன்னை மோகன் என்று அறிமுகபடுத்தி கொண்டார். சரவணபவா என்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன்.

இதுநடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள். தலைநகர் டில்லி, பாராளுமன்ற குடியிருப்பு பகுதி. எனது இளமைக்கால சங்கப்பலகை-வடக்குமாசிவீதி, மதுரை மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் தேர்வு செய்ய்யபட்ட அந்த தோழரின் இல்லத்தில் அவரை சந்தித்து, அங்குள்ள அவரது விருந்தினர் அறையிலேயே 20 நாட்கள் நானும் என்மணைவியும் தங்கினோம்.

அவரது ராஜஸ்தான் சமையல்காரர் லால் 20 நாட்களும் அந்த தோழருடன் எங்களுக்கும் உணவளித்தது மறக்கமுடியாத நிகழ்வாகும் அவர்தான் 35 ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ட்ரோ படிப்பகத்தில் நான் சந்தித்த தோழர் மோகன் MP. 

ஒருநாள் டில்லி பாராளுமன்றதிற்கு அவரது பிரதிநிதிகளாக பார்வையாளர் பகுதியில் அமர்ந்து, பாராளுமன்ற நிகழ்சிகளை கவனித்துவிட்டு திரும்பியவுடன், இரவு சாப்பாட்டு நேரத்தில் நானும் என்மணைவியும் ( அவரது மணைவி படித்தபோது மதுரை மீனாக்ஷி அரசினர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) அவருடன் பேசியதில்…

நீங்கமட்டும் அமைதியா, பொறுமையா, அடக்கமா, பண்பா இருக்கீங்க. உங்ககுணம் கம்யூனிஸ்ட்னு சொல்லிக்கிற இவர்ட்ட மட்டும் இல்லையே என்று என்னைபற்றி என்மணைவி தோழர் மோகனிடம் விமர்சனம் செய்தபோது அவர்கூறியது….

நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு. மோகனின் ஒருபக்கத்தைத்தான் இந்த 20 நாளில் நீங்க பார்த்திருக்கீங்க..எனது போர்க்குணம் உங்களுக்கு தெரியாது. அதேபோல்தான் தோழர் சரவணபவா போர்க்குணம் மட்டுமே உங்கள் பார்வையில் படுகிறது அவரது மறுபக்கம் அமைதி, பொறுமை, அடக்கம், பண்பு இவைகளை 35 ஆண்டுகளாக அனைத்து தோழர்களும் அறிவோம். அவரும் நல்ல கம்யூனிஸ்ட்தான். நான் மக்கள் ஊழியன்.  அவர் அரசு ஊழியன் அவ்வளவுதான் வேறுபாடு....

இதுதான் என் நினைவில் நின்றவை – 2

மீண்டும் சந்திப்போம் - சரவணபவா

No comments:

Post a Comment