Followers

Sunday, September 15, 2013

நினைவில் நின்றவை – 8.. குமுளி பணிமணை 1981

நினைவில் நின்றவை – 8 குமுளி பணிமணை 1981ல்

1981 ஏப்ரல், 29 அன்று காலை 9-00 மணியளவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், குமுளி கிளையின் முன்பாக என்னை இறக்கிவிட்டு, மதுரையிலிருந்து வந்த பேருந்து, குமுளி கேரளா எல்லை நிறுத்தம் சென்றுவிட்டது. அப்போது நல்ல மழை. பணிமணையின் நுழைவாயில், பெரிய இரும்பு கம்பி கதவால் பூட்டியிருந்தது. அப்போதுமுதல் அந்த பணிமணை அதிகாரியாக நான் பணியேற்க வேண்டும்.

கையில் இரண்டு பெட்டிகளுடன், மழையில் நனைந்தவாறே கதவை திறக்க குரல் கொடுத்தேன். தொலைலிருந்து அந்த காவலர் வீராச்சாமி கதவை திறக்கமுடியாது என்று கைசமிக்கை செய்து, பணிமணை அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். குமுளி பார்டர் பேருந்து நிறுத்தத்தில், மதுரை பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிய பேருந்து ஓட்டுனர், என்நிலையை பார்த்து, பேருந்தை பணிமனை முன்பு நிறுத்தி ஒலி எழுப்பினார். பேருந்தை பார்த்ததும் காவலர் வீராச்சாமி குடையுடன் வந்து இரும்புகதவை திறந்துவிட்டார். ஏன்சார் இன்னும் இங்கே நிக்கிறீங்க? பேருந்துகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி… வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது…என்று என்னிடம் காவலர் வீரச்சாமி கூறிக்கொண்டிருக்கும்போது, பேருந்து ஓட்டுனர், காவலரிடம் என்னை அறிமுகப்படுத்த, நான் எனது அடையாள அட்டையை காண்பித்தவுடன், வருத்தம் தெரிவித்து கதவை திறந்துவிட்டார்.


.குமுளி பணிமணையில் அப்போது ஒரு காவலர், ஒரு லாரி ஓட்டுனர் மூவேந்திரன் இவர்களுடன் ஒரு லாரி மட்டுமே இருந்தது. இரவில் மட்டும் கோட்டயம் செல்லும் சென்னை விரைவு பேருந்துகள் 4 வந்து செல்லும். சிறிய அலுவலக அறை-பயன்பாடற்ற குளியளறை,கழிவறை, மோட்டார் பம்ப்செட் இல்லாத கிணறு – இதுதான் பணிமணை நிலை. மதுரை தலைமை அலுவலக கேண்டீனிலிருந்து 2 டைனிங் டேபிள், 6 நாற்காலி, 1 இரும்பு பீரோ இவைகளை அன்றே வரவழைத்தேன். அலுவலக அறை, குளியளறை, கழிப்பறை சுத்தம் செய்து சின்டெக்ஸ் தொட்டியில் கிணற்று தண்ணீரை வாலிமூலம் கவலர், ஓட்டுனர் மூலம் தினமும் காலையில் நிரப்ப செய்தேன்.

முதல்நாள் மாலை 6-00 மணியளவில் சுமார் 200 ஆடு மாடுகள் பணிமனக்குள் நுழைந்தன. பணிமணை வளாகத்தில் நுழைவாயில் முன்பு சிறிய குடிசை போட்டு பலவருடங்களாக காவலர் வீராச்சாமி ஒரு பெண்னுடன் சேர்ந்து வசிப்பதும், இரவில் பணிமணையில் தங்கும் ஆடு மாடுகளுக்கு தினமும் வாடகை பணம் மாமூல் வசூல் செய்வது காவலர் வழக்கம் என்பதையும், குமுளி கம்யூனிஸ்ட் செயலாளர் தோழர் செல்லையா அவர்கள் மூலம், முன்பே அறிமுகமாகி தெரிந்து கொண்ட்தால், காவலரை எச்சரித்து, குடிசையை காலிசெய்யவைத்து, ஆடு மாடுகளை வெளியேற்றி, பணிமணை வெளியே சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை இனி இங்கு சாராயம் விற்கக் கூடாது என்று குமுளி காவல்துறையினர் மூலம் எச்சரித்து, அனுப்பினேன்.

சிலருக்கு சிலரை காரணமின்றி பிடிக்காது. சிலருக்கு சிலரை காரணமின்றி பிடித்துவிடும். அதுபோலத்தான் அன்றய பொதுமேலாளர் திரு.ரங்கநாதன் அவர்களுக்கு என்னிடம் ஒரு அபிமானம் இருந்தது. மதுரையிலிருந்து குமுளிக்கு புறப்படும்போது அவர், குமுளியில் நான் செய்யவேண்டிய முக்கிய பணிகளாக கீழ்கண்டவைகளை கூறினார்:

1.   பணிமணை தளப்பகுதி மண்மேட்டை தகர்த்து, அப்புறப்படுத்தி லோயர்கேம்ப் பகுதியில் லாரிமூலம் சேர்க்கவேண்டும். பணிமணை தளம் சமபடுத்த வேண்டும் (Earth work).

2.   லோயெர்கேம்ப் மின்வாரியத்திலிருந்து, குமுளி பணிமணைக்கு, திரீபேஸ் கனக்சன் வாங்கவேண்டும்.

3.   பணிமணை கிணற்றில் மோட்டார் பொறுத்தி மேல்நிலை நீர்தொட்டியில் நீரேற்றவேண்டும்.

தலைமை அலுவலக பொறியியல் துறைமூலம் வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பணிமணை தளம் சமபடுத்தும் வேலை – மண்குவியளை லாரியில் ஏற்ற, லாரி ஓட்டுனர் மூவேந்திரன் லாரிமூலம் அவைகளை லோயெர்கேம்ப் பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணி ஆரம்பமானது. சில பல தினங்கள் கடந்தன.

பணிமனை அருகிலுள்ள எஸ்டேட் நாய் வைசர் என்னுடைய கவனிப்பால் என்னுடன் பழகி, என்னுடனேயே தங்கிவிட்டது. பணிமனைக்கு சம்பளமின்றி உண்மையான ஒரு காவலனாக வைசர் இருந்தது. ஒருநாள் லாரி ஓட்டுனர் மூவேந்திரன் கடுமையான. குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை எனது அலுவலக அறையில் இருமேசைகளை இணைத்து அதன்மேல் கம்பளி விரித்து அதன்மேல் படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, இரவு 7-007777ஏழு மணியளவில் கைலி, பனியன். முண்டாசுடன் நான் லாரியை பணிமனைக்குள் இயக்கிகொண்டிருந்தேன். அப்போது பணிமணை வாசலில் ஒரு அம்பாசடர் கார் வந்து நின்றது. வைசர் குறைத்துகொண்டே காருக்கு வழிவிட மறுத்தது.

வைசருக்கு குரல் கொடுத்து கார் பணிமணை வந்து, அதிலிருந்து இறங்கிய பொதுமேலாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் அலுவலக அறைக்கு சென்றார். அங்கு லாரி ஓட்டுனர் தூங்கிகொண்டிருந்தார். அவரை எழுப்பி மேளாளர் எங்கே? லாரியை கைலி, பனியன், முண்டாசுடன் ஓட்டுவது யார்? என்று வினவினார். தனக்கு காய்ச்சலாயிருப்பதால், மேலாளர், அவரது அறையில் ஓய்வு எடுக்கசொல்லிவிட்டு அவர்தான் லாரியை இயக்கிகொண்டிருக்கிறார் என்ரு கூறும்போதே, நானும் பொதுமேலாளரிடம் வந்து, வணக்கம்கூறி, லாரியில் மண்அள்ளும் வேலை தொய்வு ஏற்படாமல் இருக்க மாற்று ஓட்டுனராக பணிசெய்யவேண்டிய நிலையை எடுத்துகூறினேன்.

என்மேல் அவருக்கு நல்லபுரிதல் ஏற்பட்டு, எனது குடும்பம் பற்றி விசாரித்தார். என் அம்மா கோயம்புத்தூரில் என் தம்பியுடன் இருக்கிறார்கள். என் ஒருவயது மகன் அருண் சென்னையில் என்மாமியார் வீட்டில் இருக்கிறான். என் மனைவி மதுரையில், அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் உதவிபேராசிரியையாக பணியாற்றுவதால், மதுரை கே.கே.நகரில் தனியாக வசித்து வருகிறார். நானோ தங்கள் உத்திரவுக்கு கட்டுப்பட்டு தனியாக குமுளியில் உள்ளேன். எனதுமேசைமேல் எனது 1 வயது மகன் அருண் புகைபடம், அருகில் வைசர் ஜெர்மன்செப்பெர்ட் நாய் இதுதான் தற்போது என் உலகம். தனிமையை வெல்ல பணிமணை வேலையில் அதிகமாக ஈடுபடுவதாக கூறினேன்.

பணிமணையை சுற்றி பார்த்த அவர், பணிமணை தளவேலை முடியும்நிலை பார்த்து எனை பாரட்டினார். திரீபேஸ் மின் இணைப்பு, மோட்டார் பம்ப்செட் வேலையை விரைவில் முடித்துவிட்டால், மதுரைக்கு மாற்றலாகிவர ஆவன  செய்வதாக கூறி சென்றுவிட்டார்.


தினமும் காலை 5-00 மணிமுதல் 6-00 மணிமுடிய குமுளி பணிமணையிலிருந்து லேக்வியூவ் ஹோட்டல் வரை நடைபயிற்ச்சி. காலை 6-00 மணிக்கு பணிமணை எதிரில் உள்ள தோழர் செல்லையா ஏலக்காய் எஸ்டேட்டில் குளியல். தோழர் செல்லைய்யாவுடன் அரட்டை. காலை 7.30 மணிக்கு குமுளி செக்போஸ்ட் அருகிலுள்ள விடுதியில் 2 சப்பாத்தி+ முட்டைகறி, 8-00 முதல் 12-00 மணி முடிய பணிமணை வேலை. மதியம் 12.30 மணிக்கு லோயர்கேம்ப் மெஸ்சிலிருந்து பேருந்துமூலம் வரும் தயிர்சாதம், மதியம் 1-00 மணிமுதல் 5.00 மணிமுடிய பணிமனை வேலை. மாலை 5-00 மணிக்கு தோழர் செல்லையாவுடன் குமுளி பணிமணையிலிருந்து புறப்பட்டு, தேக்கடிசெக்போஸ்ட் வரை பேசிக்கொண்டே நடைபயிற்சி. குமுளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயளாலர் தோழர் சாக்கோ மற்றும் குமுளி ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் தோழர் மோகன் ஆகியோரிடம் கேரள அரசியல் பற்றி உரையாடல், முடித்துக்கொண்டு, இரவு 8-00 மணிக்கு மோகன் வாட்ச் கம்பனி அருகிலுள்ள உணவுவிடுதியில் 2 ஆப்பம், 1 வரடீ, இரவு 8-30 முதல் 9-30 முடிய ஜெர்மன்செப்பர்ட் வைசர், காவலர் வீராச்சாமி, ஓட்டுனர் மூவேந்திரன் இவர்களுடன் பொழுதை கழித்துவிட்டு, இரவு 10-00 மணிவரை டிரான்சிஸ்டரில் வானொலி பாடல்களை கேட்டுக்கொண்டே தூக்கம். இதுதான் எனது தினசரி குமுளி வாழ்க்கை.

1979 ஜூன் 14 அன்று சென்னையில் எனக்கு திருமணம். 1981 ஜூன் 14 அன்று எனது குமுளி அலுவலகத்தில் மாலை 5-10 மணியளவில் எனது மேசைமீதிருந்த எனது 1 வயது மகனின் புகைபடத்தை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது என்பின்புறம் வந்து இதனைகவனித்த தோழர் செல்லையா தயங்கியபடியே என்னிடம் கூறியது… எவ்வளவு நாள் தனியாக இருந்து கஸ்டபடுவீங்க? குமுளியிலேயே படித்த நல்ல பெண் இருக்கிறது. திருமணம் செய்து குடும்பமாக இருப்பதுதான் நல்லது… (மணைவி இல்லாமல் தனியாக 1 வயது குழந்தையுடன் நான் இருப்பதாக அனுமானித்துள்ளார்)—உடனடியாக மதுரையிலுள்ள என் மணைவியை 1 வார விடுப்பில் குமுளி வர ஏற்பாடு செய்தேன். அந்த ஒருவாரம் முழுவதும் இரவு 9.00 மணிமுதல் 10-00 மணி முடிய மற்றும் காலை 6-00 மணிமுதல் 7-00 மணி முடிய என்மணைவியுடன் குமுளி – தேக்கடி சாலையில் மலைபூக்களின் வாசனையை நுகர்ந்துகொண்டே நடப்போம். குமுளி மக்கள் எங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளித்ததை இன்றும் பெருமையாக நினைக்கிறேன்.

1981 ஜூலை முதல்வாரத்தில் ஒருநாள். லோயர்கேம்ப் மின்வாரிய அலுவலகம் சென்று கோட்ட பொறியாளரை சந்தித்தேன். குமுளி பணிமனைக்கு திரீபேஸ் மின் இணைப்புக்கு விண்னப்பித்து பலமாதங்களாகியும் இணைப்பு கிடைகாததை கூறி, விரைவில் இணைப்பு வழங்கிட உத்திரவிடுமாறு கேட்டுக்கொண்டேன். பிறகு என் வழக்கமான பாணியில் சார் உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறது.. உங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? என்ன வேலை செய்கிறார்கள்? சாருக்கு சொந்த ஊர் எது? சார் கண்டிப்பான ஆபீசர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.. என்று நலம்விசாரித்தேன்…


அவரிடமிருந்து எனக்கு தேவையான ஒரு முக்கியமான தகவல் கிடைத்தது! அவரது மகள் மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி, புவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறார் என்பதுதான் அது. அவர் தொலைபேசி எண்னை குறித்துகொண்டு, உடன் மதுரைக்கு சென்று கல்லூரியில் புவியியல் பேராசிரியையான, எனது மணைவியை சந்தித்து, அவரது உதவியை கேட்டேன். லோயர்கேம்ப் மின்வாரிய கோட்டமேலாளர் மகள் யாரும்மா இங்கு படிப்பது? என்று அவரது மாணவிகளிடம் விசாரித்போது, மேம்.. நான்தான் மேம் அது என்று ஏற்கனவே அறிமுகமான ஒரு மாணவி வந்தார்.

உங்க மேம் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வது உன் அப்பாவின் கையில்தான் உள்ளது. குமுளி பணிமணைக்கு விரைவில் திரீபேஸ் மின் இணைப்பை அவர் வழங்கியபிறகுதான், எனக்கு குமுளி – மதுரை பணிமாற்றம் கிடைக்கும்…எனவே அப்பாவிடம் சிபாரிசு செய்யகோரினேன். பிறகென்ன ஒரு சில தினங்களில் மின் இணைப்பு கிடைத்தது. உடன் தலைமை அலுவலக பொறியியல் துறைமூலம் மோட்டார் பம்ப்செட் அமைத்து, மேல்நிலை நீர்தொட்டியில் கிணற்று நீரை ஏற்றியது. தகவலை மதுரை பொது மேலாளரிடம் உடன் தெரிவித்தேன்.

ஒரு சில தினக்ங்ககளுக்கு பிறகு, மதுரை தலைமை அலுவலகத்திலிருந்து உயர்மட்ட அதிகாரி திரு ரமேஷ் அவர்கள் ( அவர்தான் கனரகவாகனம் ஓட்டுதலுக்கான உரிமம் வைத்துள்ள நிறுவனத்தின் முதல் பி,இ பட்டதாரி, மற்றும். எனது துரோனாச்சாரியார் ) என்னிடம் கனரக வாகனம் ஓட்டுதலுக்கான உரிமம் உள்ளத? என்று விசாரித்தார். நிறுவனத்தின் பி.இ + கனரகவாகன ஓட்டுதலுக்கான உரிமம் வைத்துள்ள இரண்டாவது நபர் என்ற எனது தகுதியை அவரிடம் தெரிவித்தேன்.

1981 ஜூலை 20 அன்று குமுளி கிளையிலிருந்து, மதுரை தலைமை அலுவலகத்திலுள்ள ஓட்டுனர் பயிற்சி மையத்திற்கு, முதல்வராக பணிமாற்றம் வந்தது. அன்றே பணி ஒப்புக்கொண்டேன்.  ,


மீண்டும் சந்திப்போம் -சரவணபவா



No comments:

Post a Comment